தமிழகம்

தவ வலிமையால் பலரது துன்பங்களை நீக்கியவர் காஞ்சிப்பெரியவர் – எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு

70views
தன்னுடைய தவ வலிமையால் பலருடைய துன்பங்களை போக்கி அருள் செய்தவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.
மதுரை ‘அனுஷத்தின் அனுக்கிரகம்’ அமைப்பு சார்பில் சனிப்பெயர்ச்சி மற்றும் அனுஷ வைபவத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு எஸ்.எஸ்.காலனி., எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ‘ஸ்ரீ மகா பெரியவா மகிமை’ என்ற தலைப்பில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது; கடந்த நூற்றாண்டு பல மகாத்மாக்களை நமக்கு அளித்தது. சமூக அரசியலுக்கு காந்தி, ஆன்மிக வாழ்க்கைக்கு மகா பெரியவர் ஆகிய இருவரும் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.  மகாத்மா காந்திக்கு ‘சத்திய சோதனை’ புத்தகம் போல, மகா பெரியவருக்கு அமைந்தது தான் ‘தெய்வத்தின் குரல்’.  இந்த நூலை வாசித்து முடித்தவர்களுக்கு வாழ்வில் எந்த குழப்பங்களும் இருக்காது. அந்த அளவுக்கு இந்து சமயம் குறித்தும், நம் அறநெறிகள் குறித்தும் சொல்லிச் சென்றுள்ளார்.
பெரியவர், தான் சொன்ன கருத்துக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார். அதனால்தான் நாத்திகர்கள் கூட அவரின் வாய்மையையும், தூய்மையையும் வியந்தனர். தன் தவ வலிமையால் பலருடைய துன்பங்களையும் நீக்கியுள்ளார். இறுதி வரை பணம், காசை அவர் மதிக்கவுமில்லை, மிதிக்கவுமில்லை. நன்கொடையாக வரும் பணத்தைக் கூட, அதன் உண்மைத் தன்மையறிந்தே ஏற்றார்.
ஒரு முறை மகளுக்கு திருமணம் செய்ய பணவசதி இல்லாத நிலையில் இருந்தவருக்கு, பணக்கார பெண் மடத்துக்கு அளித்த நன்கொடையை அப்படியே வழங்க செய்தார். இது போல ஆயிரக்கணக்கான அறச் செயல்களை, தான் முக்தி அடையும் வரை முனைந்து செய்தவரே நம் மகாபெரியவர்.   இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். மூன்றாம் நிகழ்வான இன்று காலை 9 மணிக்கு நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினர் நடத்தும் ‘ஆண்டாள் திருக்கல்யாண’ வைபவம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து டாக்டர் ரெங்கநாயகி சச்சிதானந்தம் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடக்கிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!