கட்டுரை

ஓ தமிழா..?!

125views
பாம் ஜுமைராவின் க்ரஸென்டில் அமைந்துள்ள போர்ட்வாக்கில் நடப்பது எப்போதுமே ஒரு இனிய அனுபவம்தான். துபாயின் கட்டிடக் கலையின் புது வரவான ராயல் அட்லாண்டிஸிற்கு எதிரில் நடை மேடையில் மாலை நேர சூரியனை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தேன். அட்லாண்டிஸின் அழகை ரசிக்க வந்தவர்கள், நடை பழகுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், ஸ்கேட்டிங்க் செல்பவர்கள் என அந்த இடமே ஒரு சுற்றுலா பொருட்காட்சிபோல் கலகலவென்று இருந்தது.
எத்தனை விதமான மனிதர்கள்? எந்தெந்த நாட்டிலிருந்தெல்லாமோ, உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தெல்லாம் வந்தவர்களின் கலவையால் ஒரு பூங்கொத்தாக இருந்த அந்த சூழலில் சற்று தூரத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு என் கவனத்தை ஈர்த்தது.
கையில் கேமரா(மொபைல்).. தலையில் தொப்பி.. தோளில் ஷால்.. என நின்றிருந்த அந்த வயதான வட இந்திய பெண், அட்லாண்டிஸ் தி ராயல் ஹோட்டலை பேக்ரவுண்டாக வைத்து தன் கணவரை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.  அடுத்து அவரது கணவர் அவரை படம் பிடிக்க. அவர்கள் ஒரு சிறு தயக்கத்துடன் தங்களை கடந்து செல்லும் மனிதர்களை ஒரு எதிர்பார்ப்புடன் ஏறெடுத்துப் பார்ப்பதும் பின்னர் இருவரும் இணைந்து செல்ஃபி எடுக்க முயல்வதும். முடியாமல் தவித்து தங்களுக்குள் சிரித்துக் கொள்வதும் சுற்றும் முற்றும் மீண்டும் பார்ப்பதுமாக இருந்தனர்.
தங்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து, யாரேனும் ஒரு ஃபோட்டோ எடுத்துத் தர மாட்டார்களா என்று அவர்கள் ஆசைப்படுவதும் ஆனால் அதனை யாரிடமும் கேட்பதற்கு கூச்சப் படுவதையும் புரிந்து கொண்ட நான் நடையின் வேகத்தைக் கூட்டி சீக்கிரமாக அவர்கள் அருகில் செல்ல முயன்றேன்.
அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி சுருங்கிக் கொண்டே வர எதிர்பகுதியில் இருந்து அவர்களைக் கடந்து நடந்த இளைஞன் ஏதோ நினைத்தவராய் திரும்பி நடந்து அவர்களை நெருங்கி என்னவோ பேச தம்பதிகள் சிரித்தபடி தங்கள் மொபைல் கேமராவை அவரிடம் தந்தனர்.  அவரும் அந்த வயதான தம்பதிகளை ஒரு சேர நிற்க வைத்து குனிந்து நிமிர்ந்து சற்றே அங்கும் இங்கும் நகர்ந்து பல புகைப் படங்களை எடுப்பதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டே அவர்களை நெருங்கி இருந்தேன்.
அந்த தம்பதிகளிடம் அவர்கள் மொபைலை இளைஞன் திருப்பிக் கொடுத்து, தான் எடுத்த புகைப் படங்களைக் காட்ட அவர்கள் முகத்தில் சொல்லொணாத மகிழ்ச்சி.
அவர்கள் நன்றி நன்றி என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருக்க இவர் சிறு தலைஅசைப்பில் அவற்றை பெற்றுக் கொண்டே நகர.. எக்ஸ்கியுஸ் மீ அவரை அழைத்தது நான்தான். நீங்கள் எந்த நாடு மெல்ல ஆங்கிலத்தில் கேட்டேன். நான் சென்னை. இந்தியா என்றார். ஓ தமிழா..?! என்றேன். என் வார்த்தைகளில் பெருமிதம் ததும்பியது.
டாக்டர் ஃபஜிலா ஆசாத்,
வாழ்வியல் மற்றும் மனநல நிபுணர்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!