தமிழகம்

சிவகாசி பட்டாசு ஆலைகளில் தயாரான பட்டாசுகள் முழுமையாக விற்பனை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை – பட்டாசு விற்பனையாளர் சங்கம் தகவல்

178views
நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் உற்பத்தி குறைவாக இருந்ததால், தயாரான பட்டாசுகள் அனைத்தும் முழுமையாக விற்றுத் தீர்ந்திருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் பிரதானமான தொழிலாக இருந்து வருகிறது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் தாலுகா பகுதிகளில் ஆயிரத்து, 200 பட்டாசு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் நேரிடையாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதிற்குமான பட்டாசு தேவையில், சுமார் 90 சதவிகித பட்டாசுகள் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் பட்டாசுகள் காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை விற்பனையாகின்றன. ஆண்டு தோறும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசு விற்பனை நடந்து வந்தது. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக பட்டாசுத் தொழிலுக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருவதால், ஆண்டுக்காண்டு பட்டாசு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது.
இந்தாண்டு பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) மூலப் பொருள் சேர்க்கக்கூடாது, சரவெடிகள் தயாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால், ஆரம்ப முதலே பட்டாசு உற்பத்தி வெகுவாக குறைந்தது. சரவெடிகளுக்கு நீதிமன்ற தடை இருந்தாலும், தடையை மீறியும் சில பட்டாசு ஆலைகளிலும், சட்ட விரோதமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. பட்டாசு பிரியர்களும் சரவெடிகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். சரவெடிக்கு தடை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், சரவெடி தயாரிப்பு மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்திருக்கும். மொத்தத்தில் பட்டாசு உற்பத்திக்கு ஏற்பட்ட சிக்கல்களால், சுமார் 40 சதவிகித அளவிற்கு உற்பத்தி குறைந்து போனது. இதனால் இந்தாண்டு பட்டாசு உற்பத்தி சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்து போனது. பல்வேறு இடையூறுகளையும் தாண்டி, பல லட்சம் தொழிலாளர்களின் வியர்வையால் உருவாக்கப்பட்ட பட்டாசுகள், இந்த ஆண்டு முழுமையாக விற்று தீர்ந்துள்ளது.
இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, வழக்கத்தை விட பட்டாசு உற்பத்தி குறைவாகவே இருந்தது. மேலும் பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலை உயர்வால் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பட்டாசு விலையும் சுமார் 40 சதவிகிதம் வரை உயர்ந்திருந்தது. எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதை போல, பட்டாசுகளின் விலையும் உயர்ந்திருப்பதால் பொதுமக்கள், பட்டாசுகளின் விலை உயர்வை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மிகவும் நன்றாக இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் பட்டாசு விற்பனை மிக நன்றாக இருந்தது. சிவகாசியில் தயாரான பட்டாசுகளின் விற்பனை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறினர். வரும் ஆண்டுகளில் பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், வழக்கமான அளவில் பட்டாசு உற்பத்தியும் அதிகரிக்கும். விற்பனையும் நன்றாக இருக்கும்.
இந்த ஆண்டு பட்டாசு விற்பனை முழுமையாக நடந்திருப்பதால், அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி பணிகள் விரைவில் துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
செய்தியாளர்: வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!