தமிழகம்

ராஜபாளையத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை மாடிக்கு வர சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

47views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளி அன்னலட்சுமி என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த சில காலமாக வங்கி கணக்கை அவர் பராமரிக்கவில்லை. இதனால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
முடங்கிய தனது கணக்கை மீண்டும் செயல்படுத்த கோரி தனது உதவியாளர் மூலம் அன்னலட்சுமி வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதை வங்கி அதிகாரிகள் பெற்றுக் கொள்ளாமல் அவரை 2 நாட்கள் அலைக்கழித்ததோடு, நடக்க முடியாத அவரை மாடியில் செயல்படும் வங்கிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இன்று காலை வேறு வழியின்றி மிகுந்த சிரமத்துடன் மாடிக்கு சென்றுள்ளார். அந்த சமயம் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், வங்கி ஊழியர்கள் ஒருமையில் பேசி இயலாத நிலையில் உள்ள தன்னை அவமரியாதை செய்ததாகவும் அன்னலட்சுமி தெரிவித்தார்.
நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் கணக்கு குறித்து சந்தேகம் என்றால் வங்கி மேலாளரின் உதவியாளர், படியிறங்கி வந்து கீழே நிற்கும் அவரிடம் நேரில் வந்து விசாரிப்பது வழக்கம். இந்த நிலையில் நடக்க முடியாதவரை, மாடிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்திய வங்கி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி மேலாளர் மீது மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவமரியாதை செய்த வங்கி ஊழியர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சங்கத்தினர் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வரும் காலத்தில் இது போன்ற தவறு நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற துணை மேலாளர் அழகப்பன் உறுதியை ஏற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!