தமிழகம்

கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம்?

460views
கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்ன மாயாகுளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.  கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்களில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட புதுச்சேரி ராஜ்குமார், கர்நாடகா முஹமது ஆஷிக், சேலம் கிஷோர், விராலிமலை சிவபாலன், கன்னியாகுமரி முஹமது ஹாலிப், திருநெல்வேலி தினேஷ் குமார், மதுரை தருனீஷ், விக்ரம், ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சக மாணவர்கள் தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களை, விடுதி காப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் உடனடியாக மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் முதலுதவி அளித்து, குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. தகவலறிந்த ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் மாணவர்களிடம் விசாரித்தனர்.
ஹோட்டலில் வாங்கி கொடுத்த பரோட்டா, சிக்கன் மசாலா சாப்பிட்டதாக கூறினர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்ட உணவில் 8 பேரின் உடல் நல பாதிப்பிற்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், துணை வட்டாட்சியர் பழனி குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை உள்ளிட்ட வருவாய் துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் விசாரித்தனர்.
மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் கல்லூரிக்கு மீண்டும் அனுப்பப்படுவர் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!