மன்னார்குடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? தமிழக அரசுக்கு சீமான் எதிர்ப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான' காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரிப்படுகை மாவட்டங்களை முற்றுமுழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப்போராட்டத்தால் கைவிடப்பட்டது. பின்னர்...






