இலக்கியம்கட்டுரை

“தமிழகத்தில் தேவதாசிகள் ” – நூல் விமர்சனம்

564views
என்னைக் கவர்ந்த நூல் என்று இதை சொல்வதை விட என்னை பாதித்த நூல் என்றே சொல்லலாம்.
அப்படியாக என்னை பாதித்த ஒரு நூலாக ” தமிழகத்தில் தேவதாசிகள் ” – ஆய்வுநூல் இதை எழுதியவர் “முனைவர். கே. சதாசிவன்” அவர்கள்.
1993இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது.
தமிழில் – கமலாலயன் அவர்கள் மொழி பெயர்ப்பினில் , 2013 ஆம் ஆண்டு அகநி பதிப்பக வெளியீடாக 400 பக்கங்களுடன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.
முனைவர் கே சதாசிவன் அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராகப் பணி நிறைவு பெற்றவர். அன்னாரின் மணி மகுடத்தில் மற்றுமொரு வைரமாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் “இருபதாம் நூற்றாண்டின் படைப்புத் திறன் படைத்த 2000 அறிவுஜீவிகளில் ஒருவராக” தேர்ந்தெடுத்த பெருமையும் சேர்ந்து ஒளி வீசுகிறது.
இசை, நடனம், சிற்பம், தேவதாசிகளின் வாழ்க்கை முறை பற்றி 145 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய அவரின் மிகச் சிறந்த ஆய்வு நூலாக உலகம் முழுமைக்குமான ஒரு முக்கியமான வரலாறு தேவதாசிகள் பற்றிய “தமிழகத்தில் தேவதாசிகள்” என்கிற இந்த புத்தகம் ஒரு பெரிய தாக்கத்தைேயே ஏற்படுத்தியது என்னுள்.
பதிப்புரையில் “கவிஞர். “மு முருகேஷ்” அவர்கள் குறிப்பிடுகிறார் இப்படியாக, தேவதாசிகளின் வாழ்க்கை பற்றி பல நூல்கள் இருந்தாலும் அவர்களின் சமூக-பொருளாதார கோயில் கட்டுமான பணிகளில் அவர்களின் பங்கு பற்றி முழுமையாக குறிப்பிட்டது இந்த நூலாசிரியர் தான் என்றும் தன் எழுத்துப் பணியை கள ஆய்வுகள் மூலமும் ,மரபுவழி தரவுகள் மூலமும் பின்பற்றி எழுதியுள்ளார் என்றும் விளக்கியுள்ளார்.
” தமிழகத்தில் தேவதாசிகள் “புத்தகம் -அறிமுகம் ,அவர்களின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என 12 கட்டுரைகளாக விளக்கியுள்ளார்.
தேவதாசி – இறைவனின் ஊழியர், இறைவனுக்கு அடிமை, இறைவனுக்கு நேர்ந்து விடப்பட்ட, இறைவனை மகிழ்விக்க நியமிக்கப்பட்டவர் என பல அர்த்தங்களை கொடுக்கின்றது இந்த ஒரு பதம்.
” கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்”
என்று ஒரு பழமொழியே நினைவு வருகிறது எனக்கு. கோயிலில் இருக்கின்றவரை கடவுளாகவும், இறைவனாகவும், இன்னும் எல்லாமுமாக இருக்கின்ற ஒருவரை எவரேனும் திருடி சென்றாலோ, கடத்தினாலோ “சிலைகள் “ஆகிவிடுகின்றன .அந்த கடவுளுக்குத்தான் உயிரும் ,உணர்வும், இரத்தமும், சதையுமான பெண்களை அர்ப்பணித்து புனிதமான சேவை, இறைச் சேவை, மோட்ச பாக்கியம், சொர்க்க யோகம் என்றெல்லாம் கூறிய ஆகமங்களையும்,அறநெறிகளையும் அதற்கு துணை நின்ற அத்தனை பேரையும் எரித்து விடலாம் என்றே தோன்றுகிறது.
நாம் சிறுவயதில் விளையாடுகின்ற பொழுது ஏதேனும் தவறு செய்தால் ” நீ என்னை மாட்டி விடாதே நானும் உன்னை மாட்டி விட மாட்டேன் “என்று போடுகிற ஒப்பந்தமாகி, தான் அனுபவிக்கின்ற கேளிக்கை வாழ்வையும், சுகபோக வாழ்வையும் தன்னால் வணங்கப்படுகின்ற இறைவனுக்கும் நிகழ்த்தி பார்த்திட விரும்பிய அரசர்களின் தயாள குணத்தை எந்த வார்த்தைகளில் புகழ்வது என்றே தெரியவில்லை .அதற்கு ஒத்தூதிய சிவாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், புரோகிதர்கள் (அடைமொழிகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை)
ஏழு வயதில் ருத்ர கணிகை – அதாவது சிவனின் நம்பிக்கைக்கு உரியவராகவும்.
எட்டு வயதில் ருத்ர கன்னிகை -அதாவது சிவனின் கன்னிையராகவும்,
9 வயதில் ருத்ர தாசியாக – அதாவது சிவனின் அடிமையாகவும்,
என அவர்களே படைத்த காமிக ஆகமம் கூறுகிறது. ஏழு வயதில், எட்டு வயதில், ஒன்பது வயதில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு என்னத் தெரியும்?
“பிள்ளைக்கறி கேட்டவன்”  என்று அந்த சிவனைப் பற்றி புராணங்களில் பக்கம் பக்கமாக விவரித்தது தான் என் நினைவிற்கு வருகிறது.
அதன் நீட்சியாகத்தான்இன்றும் வஞ்சிக்கப் படுகின்றன ஒன்றும் அறியாத பிஞ்சுகள். ஹாசினியும், ஆசிபாவும், பாவம் இன்னும் பெயர் தெரியாத குட்டி தேவதைகளின் கதறல் ஒலி இந்த காற்றுவெளியில் கலந்து நம் காதின் உள் நுழைந்தால் கூட வெறும் செய்தியாக கடந்து கொண்டே இருக்கும் நம் செவிட்டு சமூகம் …
தளிச்சேரிப் பெண்டுகள், எம் பெருமான் அடிகள், என்றும் சொல்லப்படுகின்ற அவர்களை பதியிலார் என்றும் அழைக்கப்படுகிற காரணம்- முறையான திருமணம் செய்ய அனுமதி இல்லாத இவர்களுக்கு இறைவனின் சார்பாக சிவாச்சாரியார் கணவராக இருப்பார் இரவில் மட்டும். அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளை தாய்வழிச் சமூகமாக அடையாளப்படுத்துகிறார்கள். பாட்டி, அம்மா, பிள்ளை என தொடர்கிறது அப் பாரம்பரியம்.
நம்முடைய சமூகம் வேட்டை சமூகமாய் இருந்தபோது பெண்கள்தான் அச்சமூகத்தை வழி நடத்துபவர்களாகவும், தன் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துடனும் இருந்துள்ளார்கள் அதற்கு பின்பே ஆண்கள் முதன்மையான அடையாளத்தை பெற்றவர்களாகவும் பெண்களை, தங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாகவும் ,மாற்றி தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தைவழிச் சமூகமாக பெண்களை உடமைகளாக மாற்றினார்கள் என்று ” *வால்காவிலிருந்து* *கங்கை* *வரை* ” நூலில் ” *ராகுல்* *சாங்கிருத்யாயன்* ” கூறுகிறார்.
அப்படி எனில் தேவதாசிகள் தாய்வழிச் சமூகமாக இருக்கிறார்களே வரலாறு திரும்பி விட்டதா என்று பெருமையுடன் நினைக்கும் பொழுது தான் ஒரு பெரிய உண்மை புலப்படுகிறது. இக்குழந்தைக்கு இவன்தான் தகப்பன் என்று அறியப்பட்டால் பொறுப்புகள் அதிகமாகுமே, பொறுப்புகளை துறந்து விட்டால் வெறுமனே இன்பத்துடன் முடித்து விடலாம் அல்லவா. அதற்காக உருவாக்கப்பட்ட வார்த்தைதான் பதியிலார். இன்று தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகின்ற நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் போடுகிற “பொறுப்பு துறப்பு ” அன்றே நிகழ்ந்துள்ளது.

பெண்களுக்கு அடைக்கலம் தருகின்ற இடமாக கோயில்களும் ,கோயில் நிர்வாகிகளும், இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பல பெண்களை கோயிலில் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.பகலெல்லாம் பராமரிப்பு பணிகள்என்றும் ,பயிற்சிகள் என்றும், போகின்ற பொழுது இரவில் இறைவனை மகிழ்விக்கும் பணியிலும், புரோகிதர்களும் இன்னும் பல, பலருக்கும் பணியாற்றுகின்ற பாக்கியத்தைப் பெற்றவர்கள் என இறைவனின் பிரதிநிதிகளால் புகழப்படுபடுகின்ற அவர்கள். ஆக 24 மணி நேரமும் பணி செய்தவர்கள் தேவதாசிகள்.
இதெல்லாம் ஏதோ அன்றுடனே முடிந்துவிட்டதாக எனக்கு தோன்றவில்லை .ஆலயங்களை விட வசதியாகவும், முற்றிலும் குளிரூட்டப்பட்ட மடாலயங்களில் நாளொரு அலங்காரத்திலும், பொழுதொரு ஒப்பனையுமாக அரியணையில் அமர்ந்து காட்சி தருகின்ற பல ஆனந்த ஆன்மீகவாதிகளை தேடி போகின்ற நிகழ்வுகள் வாடிக்கையாகி விட்டன. என் மகளை மீட்டுத்தாருங்கள் அவரிடமிருந்து, என்று பெற்றோர் கேட்கின்ற எந்த வினாவிற்கும் இந்த ஊமை சமூகத்திடம் விடை இல்லை என்பதே நிதர்சனம்.
என்ன ஒரு வித்தியாசம் எனில் அன்று பெண்களை தேடி ஆன்மிகவாதிகள் கோயிலுக்கு வந்தார்கள். இன்று பெண்கள் அங்கே போகிறார்கள் அவ்வளவே. மற்றவை எல்லாம் ………
பெண்களை ஒரு பொருளாக ,உடைமையாக மட்டுமே கருதுகிற மனோபாவம் இங்கே காலம் காலமாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அரசர்கள் போருக்கு சென்று பகை நாட்டினரை வீழ்த்தினால் அங்கு முதலில் சிறை பிடிக்கப்படுவது பெண்கள்தான். அப்பெண்களை “கொண்டி மகளிர்” எனப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது என நூலாசிரியர் விளக்குகிறார் .கோயில் பணிகளுக்கும், இன்ன பிற பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பெண்களை விலைக்கு வாங்கி கோயிலுக்கு அர்ப்பணிக்கின்ற நிகழ்வும், பெண்கள் தாமாக முன்வந்து கோயிலில் சரணாகதி அடைவதற்கும் ஏதுவான சூழல் இருந்தது அன்றைய காலகட்டத்தில்.
அப்போது மட்டுமல்ல, “இந்திய பிரிவினை”யின் போதும் அதிக பாதிப்பிற்கு உள்ளானது “பெண்கள் தான். தங்களின் வீரமிக்க ஆண்மைத் தனத்தை காட்டிட இந்து ஆண்களும், இஸ்லாம் ஆண்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் கண்முன் பட்ட அத்தனை பெண்களையும் சீரழித்தார்கள். தங்கள் குடும்ப மானம் போகாமல் இருக்க வேண்டும் என்றால் தங்கள் வீட்டுப் பெண்களை தாங்களே கொன்று விடுவது என அதி அற்புதமான முடிவை எடுத்து செயல்படுத்திய பொறுப்பானதந்தைகளும், பாசக்கார சகோதரர்களும் நிறைந்த புண்ணிய பூமி இது. இப்படியாக தங்களின் குடும்ப மானம் என்கிற ஒன்று தன் வீட்டுப் பெண்களின் மார்பகங்களிலும்,பிறப்பு உறுப்புக்களிலும் மட்டுமே இருப்பதாக நினைத்த இவர்களின் மனநிலையை எதில் சேர்ப்பது?
அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் .எங்கள் வீட்டுப் பெண்ணை பாராட்டி ,சீராட்டி வளர்த்தால்கலர் கலராய் உடை அணிந்து வந்து என் வீட்டு பெண்களின் மனதை மயக்கி, காதலித்து இல்லை இல்லை நாடகக் காதலில் விழ வைக்கின்ற ஆண்களை கூலிப்படை வைத்துக் கொல்வோம், இல்லையெனில் விருந்துக்கு வாங்க என்று அழைத்து விஷம் வைத்தும் கொல்வோம் இல்லையெனில் நாங்களே களத்தில் இறங்கி கொல்வோம். ஏனெனில் அவளால்தான் குடும்ப மானமே கட்டிக் காக்கப் படுகிறதுஅதற்கு என் சாதியும், சமயமும் ,எங்களின் சங்கங்களும் பக்க பலமாய் இருக்கும் என்று அறைகூவல் விடுக்கின்றனர். கொலையும் செய்து அதை தற்கொலை என மாற்றி தீர்ப்பு எழுத வைக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவர்களாக பெண்ணின் பெற்றோர் இன்றும் இருக்கிறார்கள்.
சாதி, சமயம் என்பதை பெரும் அரணாகவே நினைக்கிறார்கள் என்றென்றும். ஏனைய பெண்கள் தாசிகளாக மாறுகின்ற போது காப்பு நாண் கட்டிக்கொண்ட ஆண்டாள் “நாச்சியாராகவும்” கணவரால் கைவிடப்பட்ட புனிதவதி “காரைக்கால் அம்மையாருமாக ” மாறுகின்ற சூழலுக்கு பின்புலமாக இருப்பது சாதியும்,சமயமும் தானே.
சாதியும் சமயமும் அற்றவர் என சான்றிதழ் பெற ஒரே ஒரு ” *சிநேகாவால்* “தான் முடிந்துள்ளது இத்தனை பெரிய இந்திய நாட்டில் .
பெண்களுக்கு என்று தனித்த ஆசைகள், விருப்பங்கள், உணர்வுகள் எதுவும் இல்லை என்றே நினைக்கப் படுகிறது அதிகாரத்தில் உள்ளவர்களால்.
புத்தகம் பற்றிய கருத்துகளை சொல்லவில்லையே என்கிற ஐயம் வருகிறதா உங்களுக்கு?
இந்தப் புத்தகம் பற்றி ஐயா விளக்கியதைப் படித்த அந்த கணத்தில் என்னுள் எழுந்த வினாக்கள் தாம் இவை…..
பெண்களை வெறும் போகப்பொருளாக ,சந்தைப் பொருளாக மட்டுமே நினைப்பது என்பது எக் காலத்திற்கும் பொருந்தி போகின்ற துர்பாக்கிய உருவாக்கிய நிலையை எப்படி சொல்வது? ஆண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கும் விளம்பர மாடல்களாக பெண்களையே பயன்படுத்துகின்றனர் .ஆண்,ஒரு வாசனை திரவியம் பூசினால் அனைத்து உலகங்களிலும் இருந்து பெண் கிளம்பி வந்து அவன் மேலேயே விழுகிறாளாம்.. என்ன கண்றாவி மனநிலை…. இது
இப்படித்தான் ஒவ்வொரு விளம்பரமும் உருவாக்கப்பட்டு அதை நம் வீட்டின் வரவேற்பறை வரை கொண்டுவந்து சேர்க்கின்றன ஊடகங்கள்.
தாசிகள் ,தேவரடியார் வாழ்க்கை முறை பற்றி படிக்கின்ற போது எனக்கு இன்னொரு கட்டுரை ஒன்றும் நினைவிற்கு வந்தது. *நிவேதிதா* *லூயிஸ்* எழுதிய ” அன்பின் பத்மா சுப்ரமணியம் அவர்களே உங்களுக்கு சுவர்ணமுகி நினைவு இருக்கிறதா” என்று தொடங்கும் அக்கட்டுரையில் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்து 108 வகையான கரணங்களையும் அனாசயமாக செய்து உலக அளவில் புகழ் பெற்ற அவர் “சர்க்கஸ் வித்தை காட்டும் கோமாளி” என்றும் நீங்கள் “ஆய்வு செய்யும் அறிஞர்” என்றும் மாறியது எப்படி ? என்று மிக நியாயமான வினா எழுப்பியிருக்கிறார் தனது கட்டுரையில். அவர்களின் ” *சதிராட்டத்தை* ” தான் பரதநாட்டியம் என்கிற பெயரில் ஒரு பிரிவினர் மட்டுமே சொந்தம் கொண்டாடிய அவலத்தை விளக்கி எழுதிய உண்மை வரிகள். அதேபோலதான்” தமிழிசையை ” “சாமர்த்தியமாக கர்நாடக இசை என்று மாற்றி அதையும் ஒரு பிரிவினருக்கானதாக மாற்றியதைப் பற்றி *ந* . *மம்மது* ஐயா அவர்களின் *தமிழிசை* *மரபுகள்* புத்தகத்தில் விளக்கியதும் மிகப் பொருத்தமாய் அமைகிறது.
தங்களின் வாழ்க்கை முழுமையையும் கோயிலிலே வாழ்ந்து, கோயிலிலே இறந்து தனது சிதைக்கு கோயில் மடைப்பள்ளியில் நெருப்பை பெற்று சந்தன விறகிலே வெந்து காற்றோடு காற்றாக கரைந்து போகிறார்கள் அவர்கள். இன்னும் சிலரோ தாங்கள் யாருடன் அதிக பிரியமாய் இருந்தார்களோ அவரின் மறைவின் போது உடன் கட்டை ஏறி உள்ளார்கள் என்று நூலாசிரியர் விளக்கும் பொழுது உடன் கட்டையின் நன்மையாக கைம்மை நோன்பிலிருந்து தப்பிப்பது என்பதாக பூதப் பாண்டியன் தேவி கூறியதும் நம் நினைவிற்கு வருகிறது தானே.
*தேவரடியார்* *வாழ்வியல்* – என்று ” *முனைவர்* *நர்மதா* “அவர்கள் ஆய்வு செய்து பல தகவல்களை கூறியுள்ளார். அதில் ஒன்றாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து வருகிறது ஒரு பட்டை சாதம்தான் ( அதாவது கால்படி அளவிற்கு) தருவார்களாம். கோயிலில் திருவிழா நடைபெறும் பொழுது உற்சவம் முடிந்து கோயிலுக்கு மீண்டும் வரும்போது அவர்கள் தான் இறைவனுக்கு திருஷ்டி ஆரத்தி எடுப்பார்களாம்.
தேவதாசிகள் இப்படியே தான் இருந்தார்களா என்று வேறு தகவல்களைத் தேடியதில்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு கோபுரம் வெள்ளையாக இருக்கும். ஏன் என்று பார்த்தால் அக்கோயிலில் இருந்த ஒரு தாசியின் பெயர் வெள்ளையம்மாள். இஸ்லாமிய படையெடுப்பின் போது அங்கே முகாமிட்டிருந்த படைத்தளபதியை சாதுர்யமாக பேசி கோபுர உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவனைத் தள்ளிவிட்டு தானும் குதித்து உயிர் நீத்து, அரங்கனின் செல்வங்களைக் காத்தாள் என்று ஒரு வரலாறு. இறைவனை மகிழ்விக்க வந்த ஒருத்தியால் தான் அரங்கனும், அரங்கனின் செல்வமும் காப்பாற்றப்பட்டன. எந்த அடியாராலோ, ஆழ்வாேராலோ அல்ல….
கிருஷ்ண தேவராயர் மங்கள விலாசத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட , அது தாசியின் வீடென தெரிந்ததும் தன் தவற்றை மறைக்க அவ் வீட்டை தரைமட்டமாக இடித்துத் தள்ள உத்தரவிட்டார். அவ்வில்ல தாசியோ அதை அனைவரும் பயன்படுத்தும் ஆயா குளமாக மாற்றினார் என்கிற வரலாறையும் தெரிந்து கொண்டேன்.( *அனுபம்* *மிஸ்ராவின்* *”குளங்கள்* *இன்றும்* *வாழ்கின்றன*” நூலில் இருந்து)
இது போல இன்னும் இன்னும் பல தாசிகளின் சேவைகளும், சாதனைகளும் பற்றி கவிஞர் *அ* . **வெண்ணிலா* * *தடம்* *பதித்த* *தேவரடியார்கள்* நூலில் விளக்கியுள்ளார்.

ஆனால் நாம் அவர்களை சிவப்பு விளக்குப் பகுதிக்கும், காமாத்திப்புராவிற்கும், சோனா கன்ச் பகுதிக்கும் சொந்தக்காரர்களாக்கி பாலியல் வறட்சிக்கு இவர்களே தீர்வு என மாற்றி வைத்துள்ளோம்.
இப்படியாக வாழ்ந்த அவர்களுக்காக முதன்முதலில் பொதுவெளியில் குரல் எழுப்பியவர் பெரியார். பெரியாரின் தூண்டுதலின் பேரில் 1930 ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எழுப்பிய முதல் குரல் முக்கியமானது. அதற்கு எழுந்த எதிர்ப்பு குரல்களையும் மறக்க முடியாது .ஒரு வழியாக 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி தேவதாசி ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இப்படியாக கிபி 900 இருந்து ஆரம்பித்த அவர்களின் தோற்றம் ,வளர்ச்சி, ஒழிப்பு என கிபி 1800 உடன் ஒரு அடிமை சகாப்தம் நிறைவிற்கு வருகிறது. .
ஆனாலும் இன்றும் நம்மிடையே ஒரு சொல் வழக்கு இருக்கிறது .கணவனிடம் மனைவியானவள் பகலில் தாயாகவும், இரவிலே தாசியாகவும் இருக்க வேண்டும் என்று .அவர்களின் வாழ்வு சகாப்தம் முடிந்தாலும் அவர்களைப்பற்றிய நினைவானது நம் பொதுப் புத்தியிலிருந்து அகலவே அகலாது என்பதற்கு உதாரணம்தான் இச்சொல்வழக்கும் ,தேவரடியார் என்கிற வசை சொல்லும்.
இப்படியாக என்னுள்ளே பல பல வினாக்களையும் ,சிந்தனைகளையும், பலவித தேடல்களையும் ஒருசேர என் முன் நிறுத்தியது இந்த ஆய்வு நூல்.

அ.ஜெ. .அமலா, ஆரணி.

3 Comments

  1. பெண்களை வஞ்சிக்கும் சமூகத்தை எழுத்துக்களால் தோலுரித்து காட்டியது வெகு சிறப்பு.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!