தமிழகம்

பயணியை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு

771views
திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கண் ரயில்வே வழியாக மும்பை தாதருக்கு வாராந்திர விரைவு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. நவம்பர் 2 அன்று இயக்கப்பட்ட தாதர் விரைவு ரயிலின் பின்புறம் பராமரிப்பிற்கு அனுப்புவதற்காக இரண்டு காலி ரயில் பெட்டிகள் பூட்டப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டது. இந்த ரயிலில் எஸ் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய சரவண அருணாச்சலம் என்ற பயணி ரயில் புறப்படும் போது கடைசி நேரத்தில் திருநெல்வேலி ரயில் நிலைய நடைமேடைக்கு வந்துள்ளார்.
ரயில் புறப்பட்டு செல்வதை கண்டு ஓடும் ரயிலில் கடைசியில் உள்ள பூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் தாவி ஏறி ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு சென்றுள்ளார். இதை திருநெல்வேலி வடபகுதி நடைமேடை இறுதிப் பகுதியில் ஓடும் ரயிலில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என கண்காணிக்கும் ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள் ஞானசேகரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பார்த்துள்ளனர். இந்த ரயிலின் அடுத்த நிறுத்தம் கோவில்பட்டி என்பதால் 65 கிமீ தூரத்திற்கு படியில் தொங்கிக்கொண்டு பயணித்தால் ஆபத்தில் முடியும் என உணர்ந்து உடனடியாக நிலைய அதிகாரிக்கும், அதே ரயிலில் ஆய்வு மேற்கொண்டிருந்த தங்களது மேற்பார்வையாளர் பாலமுருகனுக்கும் தெரிவித்தனர்.
பாலமுருகன் உடனடியாக ரயில் டிரைவர் மற்றும் மேலாளருக்கு நிலைமையை தெரிவித்து ரயிலை நிறுத்த கூறினார். அதற்குள் ரயில் 14 கிமீ தூரம் கடந்து கங்கைகொண்டான் ரயில் நிலையம் வந்துவிட்டது. கங்கைகொண்டான் கடந்தவுடன் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பயணி இறக்கப்பட்டு, ஓடும் ரயிலில் ஏறக்கூடாது, ஆபத்தானது என அறிவுரை கூறி எஸ் 2 பெட்டியில் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார். சமயோசிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய திருநெல்வேலி நிலைய ரயில் பெட்டி பராமரிப்பு மேற்பார்வையாளர் எஸ். பாலமுருகன், ஊழியர்கள் பி. ஞானசேகரன் ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு மதுரை ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.
உடனிருந்த கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் மகேஷ் கட்கரி, கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோரும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!