தமிழகம்

அலங்காநல்லூர் அருகே கரும்பு விவசாயிகள், போலீஸார் தள்ளுமுள்ளு:

29views
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமையில் கவன ஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால், ஆலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கரும்பு விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை எதிர்ப்பையும் மீறி கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊமச்சிகுளம் வழியாக கவன ஈர்ப்பு நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடக்க முயன்ற கரும்பு விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், கரும்பு விவசாயிகள் சாலையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையின் தடையை மீறி நடை பயணத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டசபையில் ஏற்கனவே, அறிவித்தபடி ஆலை இயங்க தேவையான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலை இயங்காமல் உள்ளதால், கரும்பு விவசாயிகள் ஆலைத் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநில கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் ஸ்டாலின் குமார், துணைத் தலைவர் ராமராஜ், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, அச்சம்பட்டி அருகே விவசாயிகள் நடந்து வந்த போது காவல்துறை தடுத்ததால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!