தமிழகம்

ஆவின் பால் மறைமுக விலையேற்றம் – பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு கண்டனம்

96views
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது;
கடந்த வாரம் கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் பால் முகவர்களோடு ஆலோசனை நடத்திய அதிகாரிகள் தற்போது தினசரி விற்பனையாகும் பாலின் அளவை சுமார் 30ஆயிரம் லிட்டர் வரை குறைக்க வேண்டும் என நிர்பந்தப்படுத்திய நிலையில் நுகர்வோர் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு வரும், அதனை தங்களால் எதிர்கொள்ள முடியாது என தெரிவித்து ஆவின் அதிகாரிகளுடைய வேண்டுகோளை பால் முகவர்கள் புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பாலான பச்சை நிற பால் பாக்கெட்டில் கொழுப்பு சத்து 4.5%, திடசத்து 8.5% என இருந்ததை நிர்வாக காரணங்களுக்காக என்று கூறி இன்று (01.02.2023) முதல் கொழுப்பு சத்து அளவை 1% குறைத்து, அதாவது கொழுப்பு சத்து 3.5%, திடசத்து 8.5% என சத்துக்களின் அளவை குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், அதே விற்பனை விலையில் (500ML 22.00), பச்சை நிற பாக்கெட்டில் “Cow Milk” என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் செயலை கோவை மாவட்ட ஆவின் முன்னெடுத்துள்ளதையும், மக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 3.00ரூபாய் விலை உயர்வை திணித்திருப்பதையும் (குறைக்கப்பட்ட கொழுப்பு சத்து அடிப்படையில் 1 Total Solids ரூபாய் 2.91ஆகும்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறுவதையும், தங்களை கட்டுப்படுத்த எவரும் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பால் பாக்கெட்டுகளை வகை, வகையாக உற்பத்தி செய்து அதில் கொழுப்பு சத்து, திடசத்து அளவுகளையும், பாக்கெட்டில் உள்ள பால், தயிரின் அளவுகளையும் குறைத்து, விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தி வரும் நிலையில் தனியார் பால் நிறுவனங்களே செய்யும் போது மாநில அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான நாமும் செய்தால் என்ன தவறு..? நம்மை கேள்வி கேட்பார் யார் இருக்கிறார்கள்..? என்கிற மமதையோடு செயல்பட தொடங்கியிருக்கும் ஆவினின் மக்கள் விரோத போக்கு ஏற்புடையதல்ல.
ஏற்கனவே கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் தற்போது பால் கொள்முதல் தினசரி 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து ஆவினுக்கான பால் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் சூழலில் தற்போதைய செயல்பாடுகள் ஆவின் பால் விற்பனையை படுபாதாளத்தில் தள்ளி விடும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய வகையில் பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை குறைக்க நடவடிக்கை எடுப்பது, விற்பனை அளவை குறைக்கும் அதே நேரம் மறைமுக விற்பனை விலை உயர்வை அமுல்படுத்துவது, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை கொண்டு ஆவின் நடப்பாண்டில் கூடுதல் லாபம் ஈட்டியது என பொய் தகவல்களை பரப்புவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் கோவை மாவட்ட ஒன்றியத்தில் தற்போது சத்துக்களை குறைத்து பழைய விற்பனை விலையிலேயே Cow Milk என கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி, பழைய நடைமுறையில் அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் அல்லது புதிய வகை பாலினை விநியோகம் செய்வதாக இருந்தால் அதற்கான விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!