செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி: மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா அரை இறுதியில் வீழ்ந்தார்

51views

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் நேற்று மகளிருக்கான ஹாக்கியில் வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் குர்ஜித் கவுர் 25, 26-வது நிமிடங்களிலும் வந்தனா கட்டாரியா 29-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் எலினா ரேயர் (16-வது நிமிடம்), சாரா ராபர்ட்சன் (24-வது நிமிடம்), ஹோலி பியர்ன் (35-வது நிமிடம்), கிரேஸ் பால்ட்சன் (48-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

தொடக்கத்தில் 0-2 என்ற என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த இந்திய அணி அதன் பின்னர் மீண்டு வந்து முதல் பாதி ஆட்டத்தில் 3-2 என முன்னிலை பெற்றது. ஆனால் அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து அணி இடைவிடாமல் அழுத்தம் கொடுத்து மேலும் இரு கோல்களை அடித்து வெற்றியை இந்திய அணியிடம் இருந்து பறித்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த போதிலும் இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

பஜ்ரங் புனியா ஏமாற்றம்

ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 5-12என்ற கணக்கில் அஜர்பைஜானின் ஹாஜி அலியே விடம் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த பஜ்ரங் புனியா வெண்கலப் பதக் கத்துக்கான மோதலில் இன்று விளையாடுகிறார். மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா 1-3 என்ற கணக்கில் துனிசியாவின் சாரா ஹம்தியிடம் தோல்வியடைந்தார்.

தடகளத்தில் ஆடவருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, நிர்மல் டாம் நோவா மற்றும் அனஸ் முகமது யாஹியா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3.00.25 விநாடிகளில் கடந்து ஹீட்ஸ் பிரிவில் 4-வது இடம் பித்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 9-வது இடம் பிடித்த இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறியது.

ஊக்கப்படுத்திய மோடி

இந்திய மகளிர் ஹாக்கி அணியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டார். சோகத்தில் இருந்த அவர்களுடனும் பயிற்சி யாளருடனும் அவர் பேசினார்.

அப்போது பிரதமர் கூறும் போது, ‘நீங்கள் அற்புதமாக விளையாடினீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக இந்த போட்டிக்காக வியர்வை சிந்தி உழைத்தீர்கள். உங்களின் வியர்வை நாட்டின் கோடிக்கணக்கான பெண் களுக்கு உத்வேகமாக மாறியுள்ளது. அனைத்து வீரர் களையும் பயிற்சியாளரையும் வாழ்த்துகிறேன்’ என்றார்.

போட்டியில் வீராங்கனை நவ்னீத் கவுருக்கு கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன. அவரது உடல்நலம் குறித்தும் பிரதமர் விசாரித்தார். தங்களை ஊக்கப்படுத்திய பிரதமருக்கு அணியின் கேப்டன் ராணி ராம்பால் நன்றி தெரிவித்தார்.

போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்தனாகட்டாரியா மற்றும் சலீமாவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். தோல்வி காரண மாக வீராங்கனைகள் சிலர் மனம் உடைந்திருந்தனர். அவர்களை ஆறுதல்படுத்திய பிரதமர், ‘உங்களால் நாடு பெருமிதம் அடைகிறது. சோர்வடைய வேண்டாம். இந்தியாவின் அடையாளமாக விளங்கும் ஹாக்கி அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கடின உழைப்பால் முக்கியத்துவம் பெற்றுள்ளது’ என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!