அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் உத்வேகம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய்க்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கம் வென்றார்,
2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்கடுத்து தற்போது பளுதூக்கும் போட்டியில் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்திருக்கிறார்.
மீராபாய் வென்ற பதக்கத்தின் மூலம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மீராபாய்க்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் இதைவிட மகிழ்ச்சியான தொடக்கத்தைக் கேட்டிருக்க முடியாது. மீராபாயின் அற்புதமான செயல் திறனைக் கண்டு இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் உத்வேகம்’ என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த மீராபாய்க்கு வாழ்த்துகள். தனது மகளால் இந்தியா பெருமை கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். எனது மனமார்ந்த வாழ்த்துகள் மீராபாய் சானு. பளுதூக்கலில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் முதல் வெள்ளிப் பதக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.