செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்: உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கியமானவர்

49views

இந்திய கிரிக்கெட் வீரரும், 1983-இல் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்ற அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான யஷ்பால் சர்மா (66), மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தில்லியில் வசித்து வந்த யஷ்பால் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்று, வீட்டுக்கு வந்த பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு மனைவி, 2 மகள்கள், மகன் உள்ளனர். லோதி ரோடு பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அவரது சகாக்களான கீர்த்தி ஆஸாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி 1,606 ரன்களும், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 883 ரன்களும் அடித்துள்ளார் யஷ்பால் சர்மா. மேலும், அந்த இரு ஃபார்மட்டுகளிலும் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளார். 1983-இல் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அரைசதம் விளாசிய அவரது ஆட்டம் மிகவும் பிரபலமானது.

ரஞ்சி கிரிக்கெட்டில், பஞ்சாப், ஹரியாணா, ரயில்வேஸ் ஆகிய 3 அணிகளிலும் விளையாடியுள்ளார். மொத்தமாக 160 ஆட்டங்களில் 8,933 ரன்கள் அடித்துள்ளார். அதில் 21 சதங்களும் அடக்கம். அவரது அதிகபட்ச ஸ்கோர் 201 நாட் அவுட். இது தவிர உத்தர பிரதேச ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக இருந்ததுடன், மகளிர் கிரிக்கெட்டில் இரு ஒருநாள் ஆட்டங்களுக்கு நடுவராகவும் இருந்துள்ளார்.

2000-களில் தேசிய அணி தேர்வுக் குழுவிலும் யஷ்பால் அங்கம் வகித்தார். 2004-இல் தோனிக்கு இந்திய வாய்ப்பு வழங்கிய தேர்வுக் குழுவிலும் அவர் இருந்தார். 2011-இல் உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியை தேர்வு செய்த குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்தார். 2006-இல் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், அப்போதைய கேப்டன் செளரவ் கங்குலி இடையே மோதல் போக்கு ஏற்பட்டபோது, ஒரு தேர்வாளராக கேப்டன் கங்குலிக்கு ஆதரவளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி: யஷ்பால் சர்மா, 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியைச் சேர்ந்தவர்கள் உள்பட இந்திய அணியினரின் அன்புக்கு உரியவராக இருந்தார். மேலும், அணி வீரர்கள், வீரர்களாக முன்னேறி வருபவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன்.

அனுராக் தாக்குர் (மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்): யஷ்பால் சர்மாவின் மறைவு கவலை அளிக்கிறது. சிறந்த வீரராக இருந்த அவர், உலகக் கோப்பை போட்டியில் 2-ஆவது அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரராக இருந்தார். நடுவர், தேசிய தேர்வாளர் என அவரது பங்களிப்புகள் அனைத்தும் மறக்க இயலாதவை.

கபில்தேவ் கண்ணீர்: யஷ்பால் மறைவு குறித்து 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனான கபில்தேவை “பிடிஐ’ செய்தி நிறுவனம் தொடர்புகொண்டு கேட்டபோது, கவலையால் தன்னால் பேச முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறிவிட்டார்.

திலீப் வெங்சர்க்கார் (முன்னாள் இந்திய கேப்டன்): யஷ்பாலின் மறைவு நம்பமுடியாததாக உள்ளது. 1979-இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நானும் அவரும் இணைந்த பார்ட்னர்ஷிப் மூலம் ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. பல்கலைக்கழகத்தில் படித்த நாள்களில் இருந்தே அவரை அறிவேன். உலகக் கோப்பை வென்ற அணியிலேயே தற்போது மிகச் சிறந்த உடல்தகுதியுடன் இருந்த யஷ்பால் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

இவர்களுடன், பிசிசிஐ, அதன் தலைவர் சௌரவ் கங்குலி, கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், விவிஎஸ் லஷ்மண், இர்ஃபான் பதான் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!