நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய காலம் முதலே அவருடன் இணைந்து பயணித்து வந்தவர் மகேந்திரன். இவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும், ஒரு தேர்தலில் கூட அவர் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட பலருடன் திமுகவில் நேற்று இணைந்தார்.
இந்நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்ய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டையை மாற்றுவதுபோல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள், எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். மாற்ற வசதியாக இருக்கும்” என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.