விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் 3 சீன வீரர்களுடன் பீஜிங்கில் இருந்து நேரடியாக பேசினார் அதிபர் ஜின்பிங்..!!
சீனா கட்டமைத்து வரும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள வீரர்களுடன் சீன அதிபர் ஜின்பிங் நேரடியாக பேசியுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி நிலையங்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதில் சீனாவும் சமீபத்தில் இணைந்திருக்கிறது. தற்போது விண்வெளி நிலையம் ஒன்றரை ஏற்படுத்தி வரும் சீனா கடந்த 17ம் தேதி 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 3 வீரர்களுடனும் அதிபர் ஜின்பிங் பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரடியாக தொடர்புகொண்டு பேசினார். அவர்களது விண்வெளி நிலைய கட்டுமான பணிக்காக ஜின்பிங் நன்றி தெரிவித்துக்கொண்டார். உங்களது பணிகளை பார்க்கும் போது நாங்கள் உண்மையில் பெருமைப்படுகிறோம். சீனாவின் விண்வெளி அறிவியல் பயணத்தில் நீங்கள் கட்டி வரும் விண்வெளி ஆய்வு நிலையம் மிகவும் முக்கியமான பங்கினை வகிப்பதாக இருக்கும். நமது விண்வெளி ஆய்வுகளுக்கும் இது ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். சுமார் 5 நிமிடம் நடைபெற்ற இந்த உரையாடல்களை சீன ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பின.
அடுத்த 3 மாதங்களுக்கு விண்வெளியில் தங்கி இருக்கும் சீன வீரர்கள். டி.எச்.பி. எனப்படும் டியாங் யாங் ஹெவன்லி பேலஸ் விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்ய இருக்கின்றனர். விண்வெளி அறிவியலில் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் சீனா வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளி ஆய்வு நிலையத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.