ஜிம்பாவே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜார்விஸ் ஜிம்பாவே அணிக்காக 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். அதில் டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 58 விக்கெட்டுகளும் டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேசமயம் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அவர் 320 விக்கெட்டுகளை கைப்பற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவருக்கு கடந்த ஆண்டு முதலே உடலில் சில காயங்கள் தொடர்ந்து வர, அதன் காரணமாகவே தன்னுடைய 32வது வயதில் ஓய்வு அறிக்கையை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் இவர் விளையாட தொடங்கினார். அதேபோல 2011ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் டி20 போட்டியிலும் இவர் விளையாடினார். பின்னர் 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கவுண்டி கிரிக்கெட் தொடரில் லன்காஷிரே அணிக்காக விளையாடி வந்தார். மீண்டும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு அவருக்கு முதுகு பகுதியில் வலி இருந்தது முதுகு வலியோடு மட்டுமல்லாமல் அவருக்கு கொரோனா தொற்றும் வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மலேரியா காய்ச்சல் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்திலிருந்தும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது உடல் நிலையில் முன்னேறி வந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கும் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று அவர் தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.
தனது ஓய்வு அறிக்கையில், அவர் நான் முழுவதுமாக குணமாக கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆனது. தற்பொழுது பூரண உடல் நலத்துடன் நான் இருந்தாலும் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டேன். எனவே இந்த முடிவு சரியாக இருக்கும் என்று கூறி எனது ஓய்வு அறிக்கையை அவர் வெளியிட்டார்.
மேலும் தனது ஓய்வு அறிக்கையில், இந்த பத்து ஆண்டு காலம் ஜிம்பாப்வே அணியுடன் கலந்து நான் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும், ஜிம்பாப்வே அணிக்கு விளையாடுவதை நான் மிஸ் செய்ய போகிறேன் என்றும், ஜிம்பாப்வே அணியில் விளையாடிய நண்பர்கள் அவர்களது குடும்பம் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் இவர் விளையாடிய லன்காஷிரே அணி நிர்வாகிகளுக்கும், சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நான் புதிய தொழில் ஒன்றை ஆரம்பிக்க போகிறேன் என்றும் அதில் என்னுடைய முழு கவனமும் இனி இருக்கப் போகிறது என்றும் கூறியிருக்கிறார். அதேசமயம் ஜிம்பாவே அணிக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால் நிச்சயமாக எனது அணிக்காக நான் அந்த வேலையை செய்வேன் என்றும், எனக்கு பேரையும் புகழையும் வாங்கி கொடுத்த ஜிம்பாப்வே அணிக்காக நான் எனது சார்பாக பேரையும் புகழையும் நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்றும் அவர் இறுதியாக கூறியிருந்தார்.