செய்திகள்விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: ஆர்ஜென்டீனா – சிலி ஆட்டம் டிரா

61views

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா – சிலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆர்ஜென்டீனாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. 33-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கேப்டன் மெஸ்ஸி துல்லியமாக கோலாக்கினார்.

பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் 57-ஆவது நிமிடத்தில் சிலிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணி வீரர் ஆர்துரோ விடால் கோல் போஸ்ட்டுக்குள் அனுப்ப முயல, ஆர்ஜென்டீன கோல் கீப்பர் திறம்பட தடுத்தார்.

ஆனால், பந்து அவரது கையில் பட்டு, கோல் போஸ்டில் மோதி மீண்டும் களத்துக்குத் திரும்ப, துரிதமாக செயல்பட்ட சிலி வீரர் எட்வர்டோ வர்காஸ் அதை தலையால் முட்டி கோலாக்கினார். இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தில் எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே வேறு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இறுதியில் ஆட்டம் சமன் ஆனது.

பராகுவே வெற்றி: பிரேஸிலின் கோயானியா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 10-ஆவது நிமிடத்தில் பொலிவியா வீரர் எர்வின் சாவேத்ரா கோல் அடித்தார்.

62-ஆவது நிமிடத்தில் சக வீரர் பாஸ் செய்த பந்தை அருமையாக கோலாக்கினார் பராகுவேயின் அலெக்ஸாண்ட்ரோ ரொமேரோ. அடுத்த 3 நிமிடங்களில் அந்த அணியின் ஏஞ்செல் ரொமேரோ கோலடிக்க, பராகுவே முன்னிலை பெற்றது. 80-ஆவது நிமிடத்தில் ரொமேரோ மீண்டும் அடித்த கோலால் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது பராகுவே.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!