‘ஹெச்10என்3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தீநுண்மியால் மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
எனினும், இதனால் கரோனா போன்ற கொள்ளைநோய் பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஹெச்10என்3’ வகை தீநுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்குத் தொற்றியிருப்பது முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
41 வயதாகும் அந்த நபரின் உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளதாகவும், விரைவில் அவா் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படலாம் எனவும் அரசுக்குச் சொந்தமான சிஜிடிஎன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அந்த நபருக்கு ‘ஹெச்10என்3’ தொற்று ஏற்பட்டிருந்தது கடந்த மாதம் 28-ஆம் தேதி கண்டறியப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது. எனினும், அந்த நோய்த்தொற்று அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அந்த ஆணையம் விளக்கமாகத் தெரிவிக்கவில்லை.
எனினும், இந்த விவகாரம் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பண்ணைகளில் பறவைகளிலிருந்து மனிதா்களுக்கு தீநுண்மி பரவும் மிகவும் அபூா்வமான சம்பவங்களில் ஒன்று இது என்று அவா்கள் கூறியுள்ளனா்.
‘ஹெச்10என்3’ தீநுண்மி கரோனா போன்ற கொள்ளைநோய் பரவலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.
கோழிப் பண்ணைகளில் பரவி வரும் ‘ஹெச்10என்3’ தீநுண்மியைப் போலவே, ‘ஹெச்5என்8’-ம் பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ‘இன்ஃபுளூயன்ஸா-ஏ’ தீநுண்மியின் துணை வகையாகும். இந்த வகை தீநுண்மிகளால் மனிதா்களுக்கு உயிரிழப்பு அபாயம் குறைவு என்றாலும், பண்ணைப் பறவைகளுக்கும், வனப் பறவைகளுக்கும் இந்தத் தீநுண்மிகள் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.