சீனாவில் இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா 140 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 1980ம் ஆண்டு, ‘ஒரு குழந்தை’ என்ற கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.
யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதனால் மக்கள் தொகை குறைந்தாலும், உழைக்கும் வயதினர் எண்ணிக்கை வெகுவாக சரியத் தொடங்கியது. 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்ததால் உழைக்கும் மக்களுக்கான பற்றாக்குறை பிரச்னைக்கு வழிவகுத்தது. இதனால், கடந்த 2015ல் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. ஆனால், பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. பத்தாண்டுக்குப் பின் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், 1960ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த பிறப்பு விகிதம் பதிவானது. கடந்த ஓராண்டில் 1.2 கோடி குழந்தைகளே பிறந்துள்ளன. இது கடந்த 2019ஐ காட்டிலும் 5ல் ஒரு பங்கு குறைவாகும். 15 முதல் 59 வயதுக்கு உட்பட்ட உழைக்கும் மக்கள் தொகை 70.1 சதவீதத்தில் இருந்து 63.3 சதவீதமாக சரிந்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 8.9 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனவே, முதியவர்கள் அதிகம் கொண்ட நாடாக சீனா மாறிக் கொண்டிருப்பதால், இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பது என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மேலும் தளர்த்த கட்சியின் பொலிட்பீரோவும் அனுமதி வழங்கி உள்ளது.