கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த நோயின் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
கருப்புப் பூஞ்சை காற்றில் இருக்கக்கூடியது. மூக்கில் உள்ள சைனசில், மியூகஸ் திரவத்தை பாதித்து கண் மற்றும் மூளை என வேகமாக பரவக்கூடியது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றாது. ஆனால் பாதிக்கப்பட்டவருக்குள் வேகமாக பரவும். இதனால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்
கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, காய்ச்சல், முகத்தில் வீக்கம், வலி, பார்வை குறைபாடு , பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது , மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது ஆகியவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் .
கருப்பு பூஞ்சைகள் காற்றில் பரவி இருக்கும், அழுகிய காய்கறிகள், பழங்களில் இருக்கும். ஆரோக்கியமான நபர்களுக்கு பூஞ்சைகளால் பாதிப்பு கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் தாக்கும்.
ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொண்டால் கருப்பு பூஞ்சை நோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும். அதே போல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தபின் சத்தான உணவு எடுத்துக்கொள்ளவேண்டும். அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வயல், தோட்டத்தில் பூஞ்சைகள் அதிகம் காணப்படும். வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். இவற்றை பின்பற்றினால் கருப்பு பூஞ்சையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.