தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் நடைப்பெற்ற வ.உ.சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு

140views
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து, வ.உ.சி.யின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வ.உ.சி.யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல் பிப்ரவரி 06, 2026 அன்று நாகம்பட்டி கல்லூரியில் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையுரை ஆற்றி, நூலினை வெளியிட்டார். அவர் உரையாற்றுகையில், தமிழக வரலாற்றில் வ.உ.சிதம்பரனார் என்ற ஆளுமை, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகக் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்று போற்றப்படும் விடுதலைப் போராட்ட வீரராக அறியப்படுகிறார். ஆனால், அவர் ஒரு விவேகமான தமிழறிஞரும், நுட்பமான பதிப்பாசிரியரும் ஆவார். அவரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பெரும் முயற்சி இந்த ‘வ.உ.சி.யின் படைப்பும் பதிப்பும்’ என்னும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு வ.உ.சி. அவர்கள் சிறைவாசம் அனுபவித்த காலத்தில், உடல் வருந்தச் செக்கிழுத்த போதும் அவரது சிந்தனை தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைச் செழுமைப்படுத்துவதிலேயே இருந்தது. “கை வருந்த மெய் வருந்தச் செய்த பணிகளெல்லாம் என் தாய்மொழித் தமிழுக்காக” என்ற உயரிய நோக்கம் அவரிடம் இருந்தது. இந்நூல் வ.உ.சி.யின் ஆளுமையை, வாழ்வும் வரலாறும், இலக்கிய ஆக்கம், படைப்பாளுமை, உரைவளம், பதிப்பு, மொழிபெயர்ப்பு, சமூகப் பணிகள், தத்துவத்தேடல் ஆகிய எட்டு முக்கியத் தளங்களில் விரிவாகப் பேசுகிறது.
தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் வ.உ.சி.யின் பங்கு மகத்தானது. இளம்பூரணரின் உரைக்கு அவர் வழங்கிய செம்மையான வடிவம், பாட வேறுபாடுகளை அவர் கையாண்ட விதம் ஆகியவை ஒரு தேர்ந்த ஆய்வாளரின் கண்ணோட்டத்தில் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் ஆலனின் தத்துவங்களைச் சுதேசத் தன்மையோடு மொழிபெயர்த்த ‘மனம்போல வாழ்வு’, ‘அகமே புறம்’ போன்ற நூல்கள் வழி வ.உ.சி. முன்வைத்த வாழ்வியல் நெறிகளை இக்கட்டுரைகள் ஆழமாகப் பகுப்பாய்வு செய்கின்றன. அவரது கவிதைகளில் பொதிந்துள்ள நாட்டுப்பற்று, மெய்யியல் ஆகியவை தற்காலச் சூழலோடு ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும், அவரின் வாழ்க்கை, சமூகச்செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்று கூறினார்.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர் சீதா லட்சுமி, ஊடகவியலாளர் தி. சிவக்குமார், இ.த.ப., பல்கலைக்கழகக் கல்லூரிகள் இயக்குநர் அ. வெளியப்பன், கல்லூரி முதல்வர் மா. முருகானந்தம், பேராசிரியர்கள் பூமிச்செல்வம், இரத்தினக்குமார், இலக்குவன் ஆகியோர் கலந்து கொண்டு வ.உ.சி. பற்றியும் வ.உ.சி.யின் படைப்பும் பதிப்பும் நூல் பற்றியும் பேசினார்கள்.
தமிழகமெங்குமுள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் 104 பேர் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் வரவேற்றுப் பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் பவானி நன்றி கூறினார். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நூல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!