85views
அரக்கர்களை
அழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்
அறியாதவர்கள்…
வல்லரக்கர்களையும் தாண்டி விடும்
வாமன அவதார
விஸ்வரூப வடிவங்களில்
மறுபடியும்
முளைத்திருக்கின்றன
வல்லரசுகள்…
பத்துத் தலைகளும்
இருபது கைகளும் இல்லைதான்…
இன்னொரு வல்லரக்கம்
யூகித்து உணர முடியாத
தொல்லைதான்…
பல்லாயிரம்
ஏவுகணைப் பற்களும்
சின்னச்சின்ன பொத்தான்களும்
உண்டுதான்…
பற்றவைக்கும்
பாஸ்பரஸ்போல்
பல நூறு வண்ணங்கள்
வடிவங்கள் கொண்டவை…
பிரம்மாஸ்திரங்களைப்
புதைத்து விடும்
இந்த வீரர்களின்
கரமாஸ்திரங்கள்..
கரங்களில் ஒரு பொத்தானில்
களமாடும் மரணமாஸ்திரங்கள்…
சாம்பல் பொசுக்கும் கூடுகள்…
சந்தோஷங்கள் சிதைக்கும் கேடுகள்…
கணப்பொழுதுக்குள்
காடாகும் நாடுகள்…
பள்ளிகள்
ஆலயங்கள் பார்க்காது…
பள்ளிக்கூடங்கள்
மருத்துவமனைகள் நோக்காது…
பெரியவர் முதியவர்
பெண்கள் குழந்தைகள்
எண்ணாது….
ஒவ்வொருவர்
தலையாகவும் அல்ல
எல்லோர் தலைகளும்
ஒன்றாய் எடுக்கும்
ராக்கதச் சாவுகணைகள்
விலையாக..
எண்ணப்படும்
நொடித் துளிகளுக்குள்
நொதிக்த வைத்துவிடும்
விதிகள்…
அநாகரீகக் கோலங்களில்லை
நாகரீக வேடங்கள்…
நன்கு படித்த மூளைகள்..
வானர விலங்குகள் ப
டைபட்டாளங்கள் இல்லை…
கோடுகள் சுமந்த
அணில் குருவிகள் இல்லை…
காலம் கடக்கும்
கோளங்கள் கூட
இவர்களுக்கு விலக்கு இல்லை…
எண்ணிய எண்ணியாங்கு
செய்யும் திண்ணியர்…
இரக்கம் காட்டாத
இரத்தக்காட்டேரிகள்…
தன்மேலும் சுமத்தப்படும்
சிலுவைகளுக்காக
இருப்பில் நிறுத்தப்படும் நிலுவைகள்…
காலம் புரட்டிப்போடும்
நாளை இவர்களை
பதில் சொல்வதற்கு
வாய்ப்பே கிடைக்காமல்….
add a comment






