தமிழகம்

ஈரோடு விஜய் கூட்டத்திற்கான ஏற்பாடு எப்படி உள்ளது?

264views
ஈரோடு பெருந்துறையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதற்கு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்பு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் இதுவாகும். உள்ளரங்கங்களில் நடந்த கட்சி நிகழ்வுகளில் மட்டுமே அவர் பங்கேற்றார்.எனவே, கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதியன்று புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் பேசினார். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் என்ற பகுதியில் நடக்கும் தவெக பொதுக்கூட்டத்தில் தான் விஜய் பங்கேற்றுப் பேசவுள்ளார். இந்த கூட்டத்துக்கு அனுமதியளிப்பதற்கு காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்திருந்தது. இன்று காலை 11 மணிக்குத் துவங்கி பிற்பகல் 1 மணியளவில் இந்த கூட்டம் நிறைவுபெறவுள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை ஒட்டியே அமைந்துள்ளது. கொங்கு குறுப்பு நாட்டு படைத்தலை வேளாளர் சங்கம் என்ற அமைப்புக்குச் சொந்தமான விஜயமங்களம் ஸ்ரீவிஜயபுரி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


திறந்தவெளி நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல் கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கேயுமே நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நுழைவாயில்களும் வெளியில் செல்வதற்கான வழிகளும் போதியளவில் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் வசதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, வரும் மக்கள் அனைவருக்குமே குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. அதைத் தவிர்த்து 20 இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. திடலின் வெளிப்பகுதிகளில் குடிநீர் லாரிகள் நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் 20 பேர் தண்ணீர் குடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது’ என்றும் அறியப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேரும், பொது மக்கள் 25 ஆயிரம் பேரும் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறது. 2500 போலீசார் பாதுகாப்புக்கு கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.காவல்துறையினரின் ஒத்துழைப்பு தங்களுக்கு நன்றாக இருக்க வேண்டுமென்பதே தொண்டர்களின் விருப்பமாகவுள்ளது.

பொதுக்கூட்டம் நடக்கவுள்ள பகுதியில், இரும்புத் தடுப்புகளால் 72 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நடுப்பகுதியில் இடைவெளி விட்டு அங்கு பேருந்தில் நின்று விஜய் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 72 தடுப்புகளுள்ள பகுதிகள் ஒவ்வொன்றிலும் 500 பேர் நிற்க இடமிருப்பினும் 400 பேரை மட்டுமே நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 1800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  கூட்டத்தை கண்காணிப்பதற்காக 60 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு, டிரோன் கேமராக்களை வைத்துக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 58 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுடன் 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்துக்கு வருவோரை உள்ளே அனுமதிப்பதற்கு பிரதான வாயில் உட்பட 14 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை அழைத்து வரவேண்டாமென்று கட்சித்தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையிலும், நேற்று மாலையிலிருந்து ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பலரும் குடும்பம் குடும்பமாக வந்து பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்து செல்ஃபி புகைப்படங்கள் எடுத்ததைப் பார்க்க முடிந்தது. கட்சியின் கரைத்துண்டு, மஃப்ளர், கட்சிக்கொடிகள் போன்றவற்றின் விற்பனையும் நடந்துவந்தது.

முனைவர் என்.பத்ரி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!