தமிழகம்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைந்தார்

99views
எண்பதுகளில் சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக முதலில் எனக்கு அறிமுகமானார் .அவரது தமிழ் உச்சரிப்பு, செய்திகளை வாசிக்கும் விதத்தில் அச்செய்திகளின் பின்னணி குறித்த ஏற்ற இறக்கமான குரலில் அவர் விளக்கும் விதம் மிகவும் அபாரமாக இருக்கும்.
புதுக்கல்லூரியில் சேர்ந்தபொழுது வராண்டாவில் ஐயா தமிழன்பன் அவர்களைக் கண்டு சற்று திகைத்துப் போனேன் .பின்பு தான் புதுக்கல்லூரியில் தமிழ்த் துறையில் அவர் பேராசிரியராக பணிபுரியும் விவரத்தை அறிந்தேன் .
பகுதி நேரமாக சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார் அத்துடன் கவிதைகள் எழுதுபவர் என்ற தகவலும் அறியக் கிடைத்தது.
அரபியை இரண்டாவது மொழியாக புதுக்கல்லூரியில் எடுத்திருந்தாலும், எனது மற்ற நண்பர்கள் தமிழ்த் துறையில் பயின்றார்கள். அவர்களது நட்பின் மூலமாக தமிழன்பன் அவர்களையும் நன்கு அறிவேன்.
புதுக் கல்லூரி உமறுப்புலவர் தமிழ் மன்றம் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு ஈரோடு தமிழன்பன் அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல.

கல்லூரியில் தொடர்ச்சியாக கவியரங்கம், தமிழ் குறித்த செயல்பாடுகள் ,பேச்சுப்போட்டி, மாணவர்களின் தமிழ் ஆர்வ ஈடுபாட்டிற்கான அனைத்து செயல்களையும் ஐயா தமிழன்பன் அவர்கள் மிகச் சிறப்பாக முன்னெடுத்ததை மாணவனாக என்றும் மறக்க இயலாது.
“கயிறு அறுந்த போதுதான்
பட்டத்துக்குத்
தெரிந்தது.
உயரம் தன்னுடையதல்ல
என்று..!!”
கவிதை செயல்பாடுகளில் சென்ரியு கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள் என்று தொடர்ந்து காத்திரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்.
அகவைத் தொண்ணூறு கடந்திருந்த போதிலும் தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றிக் கொண்டிருந்தவர். தமிழன்னையின் மலர்ப்பாதங்களில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். அவரது படைப்புகள் தமிழ் கூறும் நல் உலகத்தின் சுவாசத்தில் என்றும் கலந்திருக்கும்.
ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-ராஜா ஹஸன். சென்னை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!