தமிழகம்

மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் முதுதமிழ்ப் புலவர் ப.இராமதாசர் எனும் தலைப்பில்  முதுகுளத்தூர் பேராசிரியர் சே.முனியசாமி உரை

164views
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நூற்று எண்பத்து ஐந்தாவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சியை 14.11.2025 அன்று முற்பகல் 10.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடத்தியது. இந்நிகழ்ச்சியை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர்/இயக்குநர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள் தலைமை தாங்கினார்.  மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி அவர்கள் ‘மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் முதுதமிழ்ப் புலவர் இராமதாசர் எனும் தலைப்பில் தமிழ்ககூடலுரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில், “இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடியில் பிறந்த தமிழ்ப்புலவர்களின் வரலாறு பற்றி 13 ஆண்டுகளாக ஆய்வுசெய்து வருகிறேன். நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட புலவர்கள் எங்கள் பகுதியில் வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் கொளுந்துறை என்ற ஊரில் பிறந்தவர் இராமதாசர், பள்ளியில் படிக்கும்போதே பள்ளிக்கூடத்தான் என்ற பெயர் பெற்றவர். திண்ணைப் பள்ளியில் பயிலும்போதே மூதுரை, நல்வழி உள்ளிட்ட நீதி நூல்களைப் பயின்றார். ஆயக் கலைகளில் 53 கலைகளைக் கற்றறிந்தவராக விளங்கிய இராமதாசர் மலேசியா சென்றார். 1937ஆம் ஆண்டு செந்தமிழ்ப்பாடசாலை என்னும் தமிழ்ப் பாடசாலையை உருவாக்கினார். நாட்டைக் காப்போம், உரிமை முழக்கம். பத்துகஜா திருமுருகன் பாமாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். மலேசியாவில் சமூகத் தொண்டு, தமிழ்த் தொண்டு செய்தவர். மலேசியாவில் தமிழ் வாழ்த்துப் பாடியுள்ளார். சமூக விடியலுக்காகவும் பாடுபட்டவர்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்குத் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!