106views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
குழந்தைகளை குழந்தைகளாகவே
வளருங்கள் பக்குவம் வரும்வரை …
பால்குடி மாறும்வரை…
பத்து வயது ஆகும்வரை….
பின் படுக்கை பிரியுங்கள்…
பக்கம் இருந்து கவனியுங்கள்…
படித்துக் கொடுங்கள்…
பண்படுத்துங்கள்….
செல்லம் கொடுத்தது போதும் …
அதிக இனிப்பு
வெல்லம் கொடுத்ததும் போதும்…
இனி கொஞ்சம்
சொல்லிக் கொடுங்கள்
அவர்களே கற்றுக்கொள்ளட்டும் என்று
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் …
எல்லாவற்றிலும் வேண்டாம்
உங்கள் ஆலோசனைகள்…
உதவிகள்…. ஒத்தாசைகள்…
சிறு பறவைகள்
சிறகு வெட்டுதல்போல்
அதுவும் ஒரு பாடம்…
செல்வம் இருக்கிறது
வாகனம் இருக்கிறது
ஏவாலாட்கள் உண்டு…
பஞ்சனைகள் பால் பழங்கள்…
எல்லாம் எல்லாம் இருக்கட்டும்…
கொஞ்சம் காலாற நடக்கட்டும்…
வீட்டுப் பொருள்கள் அவர்களே
விலை பேசி வாங்கட்டும்…
கூடுதல் குறைவுகள் தெரியட்டும்…
சொந்த
வாகனங்களில் செல்லாமல்
கடைவீதி போய் வரட்டும்…
உங்கள் வீட்டுச் சிறைகளிலிருந்தும்
தழைகளிலும் இருந்தும்
அவர்களைக் கொஞ்சம்
வெளியேற்றுங்கள்…
விருந்தினர்கள் உபசரிக்கட்டும்
உறவுகள்
நல்லவை கெட்டவைகளில்
கலந்து
கொள்ளட்டும்…
நிர்வாகங்களில் தலையிடட்டும்…
சின்ன சின்ன விஷயங்களை
அவர்களே செய்து கொள்ளட்டும்…
உலகம் பெரியது…
உலகம் கல்லூரி…
உலகம் பல்கலைக்கழகம்…
நீங்கள் சொல்லிக் கொடுக்காததை
உலகம் சொல்லிக்
கொடுக்கும்…
உங்களால் முடியாததை
அது அறிவித்துக் கொடுத்தும்…
வெளிஞானம் உங்கள்
கைஞானத்தை விடப் பெரியது…
உங்கள் வீட்டு முல்லை ரோஜாக்கள்
மணமாக இருக்கலாம்…
அழகாகவும் இருக்கலாம் …
அவர்கள் கொஞ்சம்
வானத்து நட்சத்திரங்களைப் பிடித்து
விளையாடி வரட்டும்…
நிலவின் மேகக் கூட்டங்களின்
முகவரிகள் பெற்று வரட்டும்…
கவிதைகள் பாடட்டும்….
கூட்டிலிருக்கும் குஞ்சை வெளித்தள்ளி
தாய்ப்பறவைதான்
காற்று சுவாசம்
கற்பித்துத் தருகிறது …
இறக்கை உடைத்து அ
துவே சிறக்க வைக்கிறது…
அடிமைகள் இல்லைதான்..
பெற்ற குழந்தைகள்தான்…
என்றாலும் உங்களை அறியாமலே
நீங்கள் கட்டியிருக்கும்
சின்னச் சின்ன இழைகளை …
சங்கிலிகளைக் கழற்றி விடுங்கள்…
சின்ன சின்ன விஷயங்களிலும்
ஊக்கப்படுத்துங்கள்..
பிடிமானக் கயிறு மட்டும்
உங்கள் பிடிக்குள் இருக்கட்டும்…
பிள்ளைகள் கொஞ்சம் வெளியில் வரட்டும்…
புதிய பாடங்கள் படிக்கட்டும்….
அதிகச் செல்லங்களும்
அதிகக் கட்டுப்பாடுகளும் கூட
இரும்பு வளையங்கள்தான்…
நீங்கள் போட்டவற்றை
நீங்களே உடையுங்கள்…..
பிறகு அறிவு வளரும் போது
தடைகள் என்று வருகின்றவற்றை
அவர்களே தகர்த்து விடுவார்கள்…
வீட்டிலிருந்து ஆரம்பம் செய்வோம்…
பின்பு அது நாட்டுக்கு
தானாகவே வந்து சேரும்….
add a comment






