கவிதை

விருதுகள்

101views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மானுட சேவைகளுக்கானவை
அந்த மகத்துவங்கள் கருதி
சிறப்பிக்கப்படுபவை
இந்தச் சிறப்பு விருதுகள்…
யாரும் கேட்டுக் கொடுப்பதில்லை…
கேட்காமலே கொடுத்து
சிறப்பிக்கிறார்கள்..
சராசரி உயரங்கள் தாண்டிய
உயர்ந்தவர்களின் மகுடங்களில்
பதிக்கப்பெறும்
இன்னொரு வைரமணி ஆகலாம்…
அறிவில் முத்துக் குளிப்பவர்களை
அடையாளப்படுத்தும்
ஆவணமாக போற்றப்படலாம்…
விஞ்ஞான வியப்புகளை
உலகின் விரல்களுக்குள்
கொண்டு தரும் யுத்திகளை
கண்டுபிடித்துத் தந்தவருக்கான
கௌரவமாக அமையலாம்…
உலகம் அதிசயித்துப் பார்க்கும்
அதிசயங்களை கட்டமைத்தவருக்கான
பாராட்டுச் சான்றிதழாகலாம்…
மருத்துவமாக இருக்கலாம்…
மகத்துவமாக இருக்கலாம்…
விஞ்ஞானமாக ஒளிரலாம்…
சரித்திரச் சாதனைகளாக அறியப்படலாம்…
மண்ணிலோ விண்ணிலோ
மானுடவியல் தன்னிலோ
மகத்துவப் பெண்ணிலோ…
உயிர்களிடம் காட்டும்
மானுட நேயத்தின் உயர்வுகளிலோ…
சமாதானப் புறாக்களின்
சிறகுகளை சிந்தைகளில்
செருகிக் கொண்டு
உலக அமைதிக்காகச் செய்கிற பெருந்
தொண்டுகளிலோ….
யாருமாகலாம்…
ஆனால் ஏவுகணை
ஏகாதிபத்தியாங்களுக்காக அல்ல…
மிகச்சிறந்தவர்களுக்காகக்
கொடுக்கப்படும்
சிறப்பான விருதுகளால்
உலகம் அறியலாம்…
இதுவரை பெற்றவர்கள் எல்லாம்
கல்விக்காகவும்
கற்ற கல்வியை உலகம் பயன்படுத்தவும்
வழியமைத்து தந்தவருக்காகவும்
வழங்கப்பட்டவை….
இயற்கை அதிசயங்களை
மனிதனுக்குள்
வியக்கின்ற வகையில்
கொண்டு வந்து அங்கீகரித்தவை…
யாருக்கும் பெரும்பாலும்
ஆபத்தில்லாதவை….
உயர்ந்த சிந்தனைகளை
உள் வைத்தே
உலகை இரட்சிப்பதில்
சிறு முனைப்பேனும்
சீர்திருத்தப் படுத்திக் காட்டியவை
ஆனால் எந்த ரத்தக் காட்டேரிக்கும்
இதுவரை வழங்கப்படவில்லை…
போர்களை மூட்டியே
தங்கள் இருப்புகளை
தக்கவைத்துக் கொள்ள முயலும்
எந்த வல்லரக்கனுக்கும்
இதுவரை வழங்கப்படாதவை…
இப்போது ஒரு வல்லரக்கனுக்கு
வழங்கப்படுவதை
இன்னொரு வல்லரக்கன்
வாழ்த்தி முன்மொழிகிறான்..
வழிமொழிகிறான்…
எச்சரிக்கை
விருதுகள் கவனம்….
ஏனெனில் இதுவரை இவை
உயிர்களைக் காத்தவர்களுக்கான
கௌரவங்களாகத்தான்
இவை வழங்கப்பட்டிருக்கின்றன….
போர்களை மூட்டி
அப்பாவி உயிர்களைப் பறிக்கும்
எந்த வல்லரக்கக் கொலைகாரனுக்கும் இல்லை…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!