விளையாட்டு

37 வருட சாம்ராஜ்ஜியத்தை தகர்த்த 17வயது சிறுவன்: விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி No.1 வீரரானார் குகேஷ்

98views
இளம் தமிழக செஸ் வீரரான ஜிஎம் குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார்.
2023 செஸ் உலகக்கோப்பையானது பாகுவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 81 வீரர்கள் நாக் அவுட் ஆன நிலையில், தமிழக இளம் வீரரான குகேஷ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இரண்டாவது சுற்றில் தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை வீழ்த்தியதற்கு பிறகு உலக தரவரிசை பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் முதல் முறையாக உலக தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் நுழைந்திருந்தார் குகேஷ். அதைத்தொடர்ந்து வெறும் 15 மாதங்களிலேயே தன்னுடைய அபாரமான திறமையால் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். இதற்கு முன் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இருந்திருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது 17 வயதான குகேஷ் 3வது இந்திய வீரராக மாறியுள்ளார்.
37 ஆண்டுகளில் முதல்முறையாக நம்பர் 1 இந்திய வீரராக விஸ்வநாதன் இருக்க மாட்டார்!
5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986-ற்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில், முதல் முறையாக உலக செஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிடும் போது, முதல் வீரராக இருக்க மாட்டார். தன்னுடைய வழிகாட்டியை பின்னுக்கு தள்ளியிருக்கும் குகேஷ், அவரின் 37 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தை தகர்க்கவிருக்கிறார்.
இந்த மாதம் இறுதியில் பைட் தரவரிசை பட்டியலை வெளியிடும் போது உலகின் 9-வது செஸ் வீரராகவும், முதல் இந்திய செஸ் வீரராகவும் முகேஷ் இருப்பார். இதற்கு முன்பு ஹரிகிருஷ்ணா விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியிருந்தாலும், தரவரிசை பட்டியல் வெளியிடும் போது நம்பர் 1 இந்திய வீரராக இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஜூலை மாதம் 2750 செஸ் புள்ளிகளை வேகமாக அடைந்த மேக்னஸ் கார்ல்சனை பின்னுக்கு தள்ளி, குறைந்த வயதில் 2750 தரவரிசை புள்ளிகளை கடந்த இளைய செஸ் வீரராக மாறினார் குகேஷ். தொடர்ந்து உலகின் நம்பர் 1 தரவரிசை வீரரையும் தோற்கடித்த குகேஷ், அதை செய்த இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சென்னையைச் சேர்ந்த சிறுவனான குகேஷ் 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது இளைய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். தற்போது உலக தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 10வது இடத்திலும், இந்திய தரவரிசை பட்டியலில் 2வது இடத்திலும் நீடிக்கிறார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!