இலக்கியம்சிறுகதை

உப்புக்கண்டம்

153views
அன்றைக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவின் மூன்றாம் நாள் விடையாத்தி நிகழ்ச்சி!
ஒவ்வொரு குடும்ப வகையறாவும் ஓர் ஆடு பிடித்து அறுத்து அதன் இறைச்சியைக் கூறு போட்டுப் பிரித்துக் கொண்டார்கள். அப்பொழுதெல்லாம் கள் குடிக்கும் வழக்கம் உண்டு. சாராயமும் கூட.
கோவில் திருவிழா என்றால் வீட்டின் முன் மாவிலை, தென்னங்குருத்தில் செய்த தோரணம், குலை ஈன்று இருக்கும் வாழைமரம்,ஈச்சங்குலை ஆகியன வாயிலின் இருபுறமும் கட்டித்தொங்கவிட்டிருப்பர். சீரியல் மின்விளக்கும் ஒளிரும்.அதைப்பார்த்தாலே திருவிழா களைகட்டி இருப்பதை உணரலாம்.
பொடிசுகள் விளையாட்டில் இங்கும் அங்கும் ஓடி இன்னும் ஆரவாரம் கூட்டுவர். உறவினர்கள் எல்லோரும் வீடு முழுக்க ஆடிப்பாடி சமைத்துச் சாப்பிட்டு குதூகலித்து மகிழ்ந்திருக்கும் கிராமிய வாழ்க்கைக்குச் சுவைக்கூட்டுவது கூறு கறி.
கோடை வெயில்.வியர்வை வடிய வடிய ஆட்டிடையன் ஆட்டை வெட்டி காய்கறியக் கூறுகட்டி விற்பதைப்போல வைத்திருந்தான்.
ஐந்து குடும்பங்கள் என ஆட்டுக் கறியைப் பிரித்துக் கொண்டனர். கூறு கறி , வீட்டுக்கு வந்ததும் அப்பா கறியைத் தனியே பிரித்து எடுத்தார். அம்மா எலும்பு கொஞ்சம் கறி கொஞ்சம் தனியா எடுத்துக் கொடுக்கச் சொன்னாங்க. எலும்புக் குழம்புக்கு கறி வறுவல். அடடா அந்த மாதிரி கறிக் குழம்பும் வருவலும் சாப்பிடுவது தனி கொண்டாட்டமான மனநிலை. உறவினரோடு சேர்ந்து உண்பது என்றால் அத்தப்புள்ள மாமன் மக சாடையோடு கண்களும் காதல் பரிமாறும்.
மீதி கறியைத் தனியே எடுத்து கோணூசியைச் சணலில் கோர்த்து ஒவ்வொரு கறி துண்டா கோர்த்து எடுத்தார் அப்பா..
அப்படியே அந்த கறித்துண்ட மாலையை வீட்டுக்கு முன் காக்கை அமராதபடி கயிற்றின் நுனியில் ஒரு சிவப்புத்துண்டைக் கட்டி வெய்யில் படும்படி தொங்கவிட்டார். அது நன்றாக உலர ஒரு வாரம் கூட ஆகும்.
மழைக்காலத்தில் அம்மா கொஞ்சம் கறித்துண்டங்களை எடுத்து அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி கறிவத்தல் குழம்பு வைத்தார்.
அடைமழைக்காலத்திற்கு அற்புதமான உணவு. ஜில்லுன்னு காத்து. சிலிர்க்கிற உடல். கைகளில் உள்ள மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் குளிர். ஊசி போட்ட மாதிரி சுருக்சுருக்கென குளிரில் உடல் விரிந்து கிடந்தது. எண்ணெய் தேய்க்காததால் கை கால்கள் மீன் செதில் போல குளிருக்கு விரிந்து இருந்தது.
வடிசோற்றுடன் அம்மா சோறு திங்க அழைச்சாங்க.அந்தக்குளிருக்கு இதமாக அம்மா வச்ச அந்தக் கறித்துண்டக் குழம்பைச் சோற்றில் ஊற்றிச் சாப்பிடத்தொடங்கியதும் அம்மா எங்க முகத்தையே உற்றுப்பார்த்தார்.
அவருக்கு அவ்வளவு சந்தோசம். தான் உண்பதைவிட பிள்ளைகள் உண்பதைப்பார்த்துப்பசியாறும் அம்மாவின் ஈர நெஞ்சத்துக்கு எதை ஈடாகச் சொல்வது?
உமிழ்நீருடன் கறியைச் சவைத்துச் சாப்பிட கிடைக்கும் சக்தியே தனி. உப்புக்கண்டத்துல சுட்டுத்தின்னாலே அதன் சுவை அலாதி. ஆனால் குழம்போடு சோறு ஒரு பிடி கூடுதலாகவே இறங்கும்.
அடடா ! அது ஒரு கனா காலம். பிள்ளைகளின் சுவை அறிந்து உப்புக்கண்டத்தை உணவாகக் கொடுத்து வளர்த்த அப்பாவின் நினைவு அப்படியே காற்றில் படபடக்கிறது.
புகைப்படத்திலிருந்து சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா!
பேராசிரியர் . அரங்கமல்லிகா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!