தமிழகம்

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

134views
சிவகாசியில், கிராமிய திருவிழா நிகழ்ச்சியை, ரேக்ளா குதிரை வண்டியில் சென்று துவக்கி வைத்தார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராதாஸ்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பாரதிய இலக்கிய சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கிராமிய திருவிழா இன்று துவங்கியது. இன்று முதல், வரும் 8ம் தேதி வரை கிராமியத் திருவிழாவை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக அன்புமணி ராமதாஸ், ரேக்ளா குதிரை வண்டியில் வந்தார். அவருக்கு பாமக கட்சியினர் உற்சாக வரவேற்பை வழங்கினர். சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குடிசை வீடுகள், விவசாய நிலம், விளையாட்டு திடல்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர், கவிஞர், எழுத்தாளுருமான திலகபாமா தலைமையில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் கிளித்தட்டு, உறியடி விளையாட்டுகளை விளையாடி, கிராமியத் திருவிழாவை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த போது, இப்போதுள்ள இளைஞர்களுக்கு கிராமங்கள் குறித்தும், பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் உயரிய சிந்தனை வேண்டும் என்ற நோக்கத்தி்ல், இந்த கிராமியத் திருவிழா நடைபெற்று வருகிறது. கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து, 600 ஊராட்சிகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை அவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். சென்னையில் தமிழக அரசு சார்பாக தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை அரசியலாக பார்க்கக்கூடாது. நமது பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் மிகப்பெரிய விழாவாகத் தான் நான் இதனை பார்க்கிறேன், வரவேற்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். திராவிட மாடல் என்று சொல்லும் ஆட்சியாளர்கள், மது வருமானம் இல்லாமல் ஆட்சி செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
50 ஆண்டுகால திராவிட ஆட்சியில், மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஆளுநர் ரவி கூறியது குறித்த கேள்விக்கு, ஆளுநருக்கு இது தேவையில்லாத வேலை என்று கூறிய அவர், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை. தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் ஆளுநர் தலையிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதவிற்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்யும் ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் அவரது கொள்கை முடிவினை சொல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநர்தான் காரணம். ஆளுனருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை. ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம், ஆனால் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினார். மேலும் அடுத்து 2026ல், பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்றார் போல வரும் நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்களை அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.
விருதுநகரில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!