கட்டுரை

“வான்காவின் தகன மஞ்சள்” – நூல் விமர்சனம்

251views
(துரோகத்தின் முதுகை உடைக்கும் வினையின் வாள்) வசந்தனின் “வான்காவின் தகன மஞ்சள்” கவிதை நூலினை முன் வைத்து.)
இவ் வாழ்வு எப்படியானது ஐயமேயில்லாமல் இது வலிகள் மிகுந்தது. பிறகு? இரணங்களை மேலே அப்பி விட்டு ஒரு கள்ளப் புன்னகையோடு கடந்துப் போவது.
அப்புறம்? சூட்சுமக் கயிற்றில் சுருக்கிட்டு சோக உத்திரத்தில் தொங்க விடுவது.? அடுத்து?
எல்லா சிறகுகளையும் அறுத்து விட்டு பறக்கச் சொல்லி நிர்ப்பந்திப்பது.. மேலும்..? போதும் போதும் வாழ்க்கையின் டயட் பெரும் போக்கு இப்படித்தானிருக்கும் அதை நாம் சொல்லிக் கொண்டே போனால் அத்தனை கைகளும் நம்மைத் தான் கொட்டும்.
இத்தனை வேதனை தழும்புகளை சுமந்து கொண்டு கடைத்தேற்ற வேண்டும். இந்த கொடும்வாழ்வினை
அத்தகைய வாழ்வின் சிக்கலை ஒரு நவீன கவிஞன் எப்படி எதிர் கொள்கிறான். அல்லது சிதிலமாகிறான் என்ற சித்திரத்தை உள்ளடக்கியதுதான் வசந்தனின் வான்காவின் தகன மஞ்சள் என்ற இத் தொகுப்பு, மனித வஞ்சத்தை.. தோள் மீது கையைப் போட்டுக் கொண்டே அவனின் கழுத்தறுக்கும் கேடினை ஒரு கவிதை இப்படி பேசுகிறது.
“துரோகங்களை பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி
அன்பும் குதர்க்கத்தனமான.
பேச்சுகளும்
எப்போதும் பரிச்சயப்பட்டதுதான்
அழுக்குப் படிந்தேறிய உலகில்
யாவரும் நடிக்கிறார்கள்
நடிப்பை பார்ப்பதற்கு மிகவும்பிரியம்
எனக்கும்
வினையின்வாள் எல்லோரையும்
அறுக்கும்
பத்திரமாக பாதுகாத்துக் கொள்வோம்
எங்கும் நாய்கள் குரைத்துக்
கொண்டிருக்கின்றன.”
‘வினையின் வாள்’ எல்லோரையும் அறுக்கும் அற்புத சொல்லாக்கம். அதோடு துரோகத்திற்கு எதிரான பிடிசாபம்.
யாரும் யாருக்கும் துரோகமிழைத்து விட்டு நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது. அது பெரும் வினை. காலம் கணக்கில் வைத்துக் கொண்டு அப்படியானவர்களை கணக்கு தீர்க்கும் மேலும் ஒரு கவிதையின் சோகத்தை பாருங்கள்-
“ஒளித்து வைக்கப் பட்ட நேசம்
நிராதரவாகி
பரிதாபத்திற்குரியவையாக
நிற்கின்றன
தேடி அலையும் பறவை
நெருப்பு கங்குகளில்
இளைப்பாறுகின்றது
பதப்படுத்தி வைத்துள்ளாய்
பூக்களின் நறுமணத்துடன்
விஷக்குடுவையொன்றை
இனி உன்காலம்,
எத்தனை கோப்பை
வேண்டுமானாலும் பரிமாறு
பருக தயாராகயிருக்கிறேன்.”
வசந்தனின் மூன்றாவது தொகுப்பு இது. அவரது மாஸ்டர் பீஸ் தொகுப்பாக இதை சொல்லலாம்.

இத் தொகுப்பு மனதை காயப் படுத்துகிறது. வாழ்வினூடான தனி மனித சோகத்தை விரிவாகப் பேசும் சிறந்த தொகுப்பாக அமைந்துள்ளது. அரசு வேலையை தற்காலிகமாக இழந்து.. மனைவி,குழந்தைகளின் அவச் சொல்லை சகித்து, பெற்றவரே கடுஞ் சொல் உகுத்து ஆதரவை விலக்கி.. சமூகததின் பல கைகளும் அச்சுறுத்தி அனாதானப்படுத்தி.. நிராதரவு செய்த ஒரு கவிப்பறவையின் சோகச் சிறகடிப்புத்தான் இத் தொகுப்பு.
பெருங்கவிஞர் அண்ணன் யவனிகாஸ்ரீராம் இதற்கு கருத்துரை வழங்கியிருப்பதும், இந்நூலை எழுத்தாளர் அண்ணன் கண்மணி குணசேகரன் எங்களது எழுத்துக்களம் இலக்கிய அமைப்பில் வெளியிட்டு உரையாற்றியிருப்பதும்..இந்நூலுக்கு கிடைத்த சிறப்பு.
வெளியீடு: நீர்மை பதிப்பகம்
விலை:100/-
சூர்யநிலா

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!