கவிதை

மாற்று!

301views
அன்பை படிக்கா புத்தகம் எதற்கு?
அறிந்தார் சொல்லா மொழிகளும் எதற்கு?
புரிந்தார் நடக்கா வழிகளும் எதற்கு?
போதனை சொல்லா வாழ்த்துக்கள் எதற்கு?
நிழல்கள் வீழா மரங்களும் எதற்கு?
நெருங்கிச் சுடாத நெருக்கங்கள் எதற்கு?
வருத்திச் சொல்லா வார்த்தைகள் எதற்கு?
வட்டமிடாத வானமும் எதற்கு?
நோக்கமில்லாத செயல்களும் எதற்கு?
நோயைத் தொழுகின்ற பழக்கங்கள் எதற்கு?
பாசம் மறந்த பார்வைகள் எதற்கு?
பற்று வைக்காத கணக்குகள் எதற்கு?
சுற்றித் திரியும் கவலைகள் எதற்கு?
சோம்பல் வைத்தார் பேச்சுகள் எதற்கு?
நன்மை விளைக்கா சொல்வளம் எதற்கு?
நலங்கள் வேண்டின் அதை நீ மாற்று!
உழுதும் விதைக்கா நிலையினை மாற்று!
உரங்கள் இல்லா நெஞ்சினை தேற்று!
அழுது கழியும் அழுக்கினை போக்கு!
அச்சம் வருத்தும் நேரத்தைத் தீட்டு!
தேயும் காலத்தை அமைதியில் ஓட்டு..
தேடலை மட்டுமே வரவாய் கைநீட்டு..
அறிவை வைத்தே விளக்கினை ஏற்று..
அப்புறம் பாடும் இன்பத் தாலாட்டு!
பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர் – தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!