425
அரசுப்பள்ளிகளில் தேர்வுக்கான நடைமுறைகளில் கவனம் கொள்ளப்பட வேண்டியவைகளில் முக்கியமானது தேர்வுக்காலத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கும் செயல்.இது இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பான்மையான பள்ளிகளில் 1.தேர்வுக்காலத்தில் மாணவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை விடைத்தாள்களுக்கென வசூலிக்கப்படுகிறது. வகுப்பாசிரியர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் இத்தொகையின் மூலம் விடைத்தாள்கள் வாங்கப்பட்டு அத்தாள்களில் பள்ளியின் முத்திரை இடப்பட்டு- அதிலும் முதன்மை விடைத்தாள்,கூடுதல் விடைத்தாள் என்று தனித்தனி முத்திரைகள் இடப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
தேர்வு அறைகளில் அறைக் கண்காணிப்பாளர் வசம் இருக்கும் இந்த விடைத்தாள்களில் அவர் சுருக்கொப்பம் இட்டு மாணவர்களின் தேவைக்கேற்ப வழங்கும் நடைமுறை பல பள்ளிகள் பின்பற்றும் நடைமுறை.
2.மாணவர்கள் விடைத்தாள்களை வெளியில் வாங்கிக்கொண்டு வருவது,அல்லது பள்ளியிலேயே முத்திரையிடப்பட்டு,ஒரு தாளுக்கு இவ்வளவு தொகை என நிர்ணயிக்கப்பட்டு பள்ளியிலேயே விற்பனை செய்யப்படும் விடைத்தாளை ஒவ்வொரு நாளும் மாணவர் தேர்வுக்கு முன் வாங்கிப் பயன்படுத்துவது என்ற இரண்டாவது நடைமுறை.
இவ்விரண்டு முறைகளில் முதல் முறையில் நடைமுறைச் சிக்கல்கள் மாணவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தங்கள் குறைவு.இரண்டாவது முறை ஏற்படுத்தும் அழுத்தம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமை.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நடைமுறை பின்பற்றப்படுவதைத் தவிர்த்து எல்லோருக்குமான ஒரு பொதுவான நடைமுறையை வழிகாட்டு நெறிமுறையாக அரசு வெளியிட வேண்டும்.அந்நடைமுறை மாணவர் நலனைக் கருத்தில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
தேர்வு நாளில் பாடப்பகுதியைப் படித்து, மனனம் செய்து, தேர்வுக்கான ஆயத்தங்களோடு வரும் மாணவன் அன்றைக்கான விடைத்தாளை வாங்கிக்கொண்டு வருவது என்பது அவனுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது.ஒரு பதட்டத்தையும் பரபரப்பையும் தருவதோடு தேர்வுக்குத் தயாராகும் இறுதி நிமிடங்களில் விடைத்தாளை வாங்குவது, பத்திரப்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் நேரவிரயமாவதும் அவனுக்கான கூடுதல் இழப்பாகவே கருதப்பட வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட அளவு விடைத்தாள்களை மட்டுமே ஒரு மாணவர் ஒருநாளில் வாங்க முடியும் என்பதால் அவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்படும் சூழலில்,விடைத்தாள்களை முன்கூட்டியே கூடுதலாக வாங்காத காரணத்தால் விடைகள் தெரிந்தும் எழுதமுடியாத நிலை ஏற்படுகிறது.அல்லது அந்தக் கூடுதல் விடைத்தாளை தேர்வு அறையிலேயே தேர்வெழுதிக் கொண்டு இருக்கும் நேரத்தில், மற்ற மாணவர்களிடம் வாங்கும்படி நேர்கையில், மற்ற மாணவர்களுக்கும் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ஒரு செயலாக அது மாறுகிறது.
இந்த விடைத்தாள்களை மாணவருக்கு தேர்வு நேரத்திற்கு முன்னதாக உரிய நேரத்திற்குள் வழங்கும் பணி, பெரும்பாலும் ஏதேனும் ஒரு ஆசிரியருக்குதான் வழங்கப்படுகிறது.அது அந்த ஆசிரியர் தனது பாடத்திற்கான தேர்வு நடைபெறும் நாளில், கூடுதல் பணிச்சுமை என்பதோடு தன் மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்செய்வதில் முழுமையான கவனத்தைச் செலுத்தமுடியாத நிலைக்கு அவரை உள்ளாக்குகிறது.
விடைத்தாள்களில் முத்திரை இடும் பணியைப் பெரும்பாலும் யார் செய்கிறார்கள்?பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் தான் செய்கிறார்கள்.அது அவர்கள் பணியா?
சில பள்ளிகளில் இப்படி விடைத்தாள்களுக்கென வசூலிக்கப்படும் தொகை பல்வேறு பணிகளுக்கு,குறிப்பாக பள்ளி வளர்ச்சிசார் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.கட்டணம் செலுத்திப் படிக்கமுடியாத சூழலில் உள்ள மாணவர்கள் பெரும்பான்மையாகப் பயிலும் அரசுப்பள்ளிகளில் அவர்களிடம் செய்யப்படும் இந்த வசூலும் இந்த நடைமுறைகளும் அரசுப்பள்ளிகள் மீதான ஒரு கறை தானே…
இந்நடைமுறை,
‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு’,
-என்னும் குறளையும் நினைவுபடுத்துகிறது, இல்லையா?என்ன செய்துகொண்டு இருக்கிறோம் நாம்?
ஆம்!செங்கோல் கொண்டு ஆட்சி புரியும் மன்னன்,மக்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவர்கள் வருமானத்தை அறிந்துகொள்ளாமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி,கூடுதல் வரி அல்லது வேறு பொருள் கேட்டு நிற்பது,வழிப்பறிக் கொள்ளைக்காரன்,வேல் போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு,மக்களிடம் பணம் பறிப்பதற்குச் சமமாகும் என்ற வள்ளுவச் சாட்டைக்கு வலிக்காமல் இருக்குமா?
யாருக்கு இந்தச் சாட்டை?அரசுப் பள்ளிகளில் எது நடந்தாலும் அது அரசின் நடைமுறை தானே?
மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களுக்கென பணம் கேட்டு நின்று, விடைத்தாள்களைப் பள்ளியில் விற்பனை செய்வதும் ஒருவகையில் ‘கோலொடு நின்றான் இரவே’!அது அரசுப்பள்ளிகளில் கூடவே கூடாது தானே…
பாடநூல்கள்,ஏடுகள்,கற்றல் கருவிகள்,சீருடை,காலணி,மிதிவண்டி,மடிக்கணினி என்று எல்லாவற்றையும் விலையில்லாமல் கொடுக்கும் அரசுப்பள்ளி விடைத்தாளுக்கு மட்டும் விலை வைப்பது தகுமா?மாற்று ஏற்பாடுகள் வேண்டும்.
வேண்டுமானால் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளும் தொகையைக் குறைவாக நிர்ணயித்து,நிறைவாக விடைத்தாள்களை மாணவருக்கு அளிக்கலாம். ஆசிரியருக்கும், மாணவருக்கும் இந்த வகையில் ஏற்படுத்தப்படும் நேரவிரயத்தையும், நெருக்கடிகளையும் தவிர்க்க புதிய நடைமுறைகளை வகுக்கலாம்.
அரசு,பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்களை அளிப்பது போல்,காலாண்டு -அரையாண்டுத் தேர்வுகளுக்கும் கூட விடைத்தாள்களை அரசே அளிக்கலாமே..அல்லது அரசுப்பள்ளிகளுக்கென பொதுவான நெறிமுறைகளை ஏற்படுத்தலாமே..
பெருந்தொற்றுக் காலத்தை முன்னிட்டு,தனியார் பள்ளிகளில் படிக்கவைத்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துவிட்டு அரசுப்பள்ளிகளில் நடைமுறைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுப்பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் பார்வையும் கூட இன்றைக்கு மாறியிருக்கிறது.பள்ளி நடைமுறைகளில் மீதான கவனம் கூடியிருக்கிறது.
இப்படிப்பட்ட சமூகச் சூழலில் அரசுப்பள்ளியின் நடைமுறைகளில் மாற்றம் அவசியமாகிறது.
உரியவர்கள் கவனித்து ஆவன செய்வோம்!
தங்கத்துரையரசி
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், தென்காசி.
thangathuraiarasi77@gmail.com
add a comment