விளையாட்டு

கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா இன்று இலங்கையுடன் மோதல்

136views
ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால் மட்டுமே பைனல் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது.
எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மோதும் ‘சூப்பர்-4’ சுற்று போட்டிகள் தற்போது நடக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. இன்று தனது இரண்டாவது போட்டியில் இலங்கையை சந்திக்கிறது.
‘சூப்பர்-4’ சுற்றில் மொத்தம் பங்கேற்கும் 3 போட்டியில் 2ல் வெற்றி பெற்றால் பைனல் குறித்து யோசிக்கலாம் என்ற நிலையில் 2ல் தோற்றால் ஏறக்குறைய பைனல் வாய்ப்பு பறிபோகும். இதனால் இன்று இந்திய அணி, இலங்கையை வீழ்த்த வேண்டிய இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் விளாசிய கோஹ்லி என மூவரும் கைகொடுக்கின்றனர். அடுத்து வரும் சூர்யகுமார் இன்று சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பன்ட் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட வேண்டும். தீபக் ஹூடா கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.
உலக கோப்பை தொடருக்கு தயாராகும் நேரத்தில் சரியான ‘லெவன்’ வீரர்களை கண்டறியாமல், தடுமாறுகிறார் பயிற்சியாளர் டிராவிட். ‘பினிஷர்’ தினேஷ் கார்த்திக்கிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நல்லது.
பும்ரா, ஹர்ஷல் படேல், ஜடேஜா இல்லாமல் இந்திய அணியின் பந்து வீச்சு தடுமாறுகிறது, புவனேஷ்வர் மீள்வார் என நம்பலாம். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்தில், காயத்தில் இருந்து மீண்டு அவேஷ் கான் அணிக்கு திரும்ப காத்திருக்கிறார். ஜடேஜா இடத்தில் அக்சர் படேல் களமிறங்கினால் அணியின் பலம் அதிகரிக்கும். சகால் ரன்களை வாரி வழங்குவது பலவீனம்.
லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் தோற்ற இலங்கை பின், அடுத்தடுத்து இரு போட்டிகளில் ‘சேஸ்’ (184/8, 179/6) செய்து வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் ஷனகா, அசலங்கா, குசல் மெண்டிஸ், குணதிலகா பேட்டிங்கில் ரன் மழை பொழிகின்றனர்.
பந்துவீச்சில் தீக் ஷனா, மதுஷனகாவுடன் ‘ஆல் ரவுண்டர்’ ஹசரங்காவும் அணிக்கு கைகொடுக்கிறார். இன்று வென்றால் இலங்கை அணி பைனல் செல்வது உறுதி. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
புள்ளிப்பட்டியல்:
‘சூப்பர்-4’ சுற்றில் அணிகள் நிலை.
அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிரன்ரேட்
இலங்கை11020.589
பாகிஸ்தான்11020.126
இந்தியா1010-0.126
ஆப்கானிஸ்தான்1010-0.589
17
இந்தியா, இலங்கை அணிகள் 25 ‘டி-20’ போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 17ல் வெற்றி பெற்றது. 7ல் இலங்கை வென்றது. 1 போட்டிக்கு முடிவில்லை.
* கடைசியாக மோதிய 3 போட்டிகளிலும் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
துபாயில் இன்றைய வெப்பநிலை அதிகபட்சம் 41, குறைந்தபட்சம் 31 டிகிரி செல்சியாக இருக்கும். போட்டி நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும். மழை வர வாய்ப்பில்லை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!