கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4×100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ள இருந்தார். ஜூலை 28ம் தேதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தனலெட்சுமிக்கு வெளிநாட்டில் உலக தடகள அமைப்பு நடத்திய சோதனையில் அவர், ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டிரிப்பிள் ஜம்ப் வீராங்கனையான ஐஸ்வர்யா கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அப்போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஐஸ்வர்யாவிடம் நடத்திய சோதனையில் அவர் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா பாபுவும், தனலெட்சுமியும் காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.