உக்ரைன் விமான நிறுவனத்தின் சரக்கு விமானம், நேற்று முன் தினம் செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்றது. எட்டு பேர் பயணித்த அதில் 12 டன் வெடிபொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென விமானத்தின் இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதுபற்றி அதிகாரிகளுக்கு விமானி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிரீஸ் நாட்டின் தெஸ்ஸலோனிகி அல்லது கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.விமானி, கவலா நகரை தேர்வு செய்து தரையிறக்க முயன்றுள்ளார்.
ஆனால், விமான நிலையத்தை அடைவதற்கு 40 கி.மீ., தொலைவுக்கு முன்பே விமானம் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.விமானத்தில் வெடிபொருட்கள் இருக்கக் கூடும் என்பதால், அதன் புகையால் பாதிப்பு ஏற்படாமலிருக்க அருகில் வசிப்பவர்களை கதவு, ஜன்னல் ஆகியவற்றை மூடி, முகக் கவசம் அணிந்துகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.