ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: பல உயிர்களை இழந்த பின்னர் தான் தமிழக அரசு கொண்டுவருமா ? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பல உயிர்களை இழந்த பின்னர் தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் ‘ஆன்லைன்’ சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். ‘ஆன்லைன்’ ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது.
ஆன்லைன் ரம்மி தடை தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் முறையாக, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடாமல் இருந்ததால், ‘ஆன்லைன்’ சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்றதால், ‘ஜாம் ஜாம்’ என்று ‘ஆன்லைன்’ சூதாட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, பணம் இழந்தவர்களின் தற்கொலையும் தொடர்கிறது. ‘ஆன்லைன்’ ரம்மி தடை சட்டத்தை எப்படி கொண்டுவரலாம் என்று ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை அளித்த பின்னரும், இன்னும் தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.
‘ஆன்லைன்’ ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தவுடன் ‘ஆன்லைன்’ ரம்மி போன்ற ‘ஆன்லைன்’ விளையாட்டுகளுக்கு உடனடியாக தடை சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலமுறை நான் வலியுறுத்தினேன். தி.மு.க. அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், ‘ஆன்லைன்’ ரம்மி போன்ற விளையாட்டு உரிமையாளர்கள் அதிக அளவில் தமிழக மக்களிடமிருந்து பணம் ஈட்டுவதும், பணத்தை இந்த தமிழக இளைஞர்கள், பண நஷ்டத்தை தாங்கமுடியாமல் தங்களது இன்னுயிரை இழப்பதும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
ஏற்கனவே 7.5.2022 அன்று ‘ஆன்லைன்’ சூதாட்டத்தால் பணம் இழந்த அம்பத்தூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை அந்த சமயத்தில் போலீஸ் டி.ஜி.பி. ‘ஆன்லைன்’ ரம்மி போன்ற விளையாட்டுகளை யாரும் விளையாடவேண்டாம் என்று அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று கோவை அரசு பொருட்காட்சியில் பணியில் இருந்த காவல்துறை காவலர் காளிமுத்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
‘ஆன்லைன்’ ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்த காவலர் காளிமுத்து மேலும் கடன் வாங்கி விளையாடியதாகவும், ஒரு கட்டத்தில் கடன் பிரச்சினை அதிகமான காரணத்தால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தினால் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களை திரட்டி போராட்டம் ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் பல்லாயிரம் கோடிகள் தினசரி புரள்கின்றன. ஆட்சியாளர்கள், சூதாட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு நாள்தோறும் பல கோடி ரூபாய்களை கமிஷனாக பெற்றுக்கொண்டு, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்டத்தை இயற்றாமல் இருக்கின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
‘ஆன்லைன்’ சூதாட்டம் முதல் அனைத்து நாசகார செயல்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்கவேண்டும். இல்லையென்றால் அப்பாவி மக்களின் உயிரை, உடமைகளை காக்கவும், தமிழக அரசை சட்ட ரீதியில் அகற்றவும் அ.தி.மு.க. மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.