இந்தியா

டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

64views

16வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான தகுதித் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அறிவிப்பில், 2022 வருட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆங்கிலம் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வு கணினி வழியில் அமையும். வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, பாடநெறி, தேர்வு மையங்கள், முக்கியமான நாட்கள் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விரிவான விவரங்கள் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்படும்.

தேர்வர்கள், அவ்வப்போது https://ctet.nic.in என்று அதிகார்ப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பக் கட்டணம்:
பிரிவினர் ஏதேனும் ஒரு தாள் இரண்டு தாள்கள்
பொது/இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.1000 ரூ.1200
பட்டியல் கண்ட சாதிகள்/பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.500 ரூ.600

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.

இரண்டு கேள்வித்தாள்களிலும், தலா 150 வினாக்கள் இடம்பெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் முறை, மொழியறிவு, கணிதம், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக இவை அமையும்.

இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களையும் எழுத வேண்டும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!