தமிழகம்

27 அம்மன் கோயில்களில் ஆடி மாத திருவிழா சிறப்பு ஏற்பாடு – அமைச்சர் சேகர் பாபு

113views

தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் எதிர்வரும் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்மன் திருக்கோயில்களான சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டக்கண்ணி அம்மன் திருக்கோயில், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை, தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன், வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைத்து தரப்படும். கூழ் வார்க்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பக்தர்கள் நேர்த்தி கடன் முடித்து சென்ற பின்பு திருக்கோயில் வளாகத்தை சுத்தமாக வைக்கவும், பொங்கல் வைக்கும் இடத்தில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தொடர்புடைய அம்மன் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஆடி மாத திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு திருவிழாக்களான ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அந்தந்த திருக்கோயில் சார்பாக கண்காணிக்கப்படுவார்கள். தற்காலிகமாக முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். கோயில்களில் திருவிழா நேரத்தில் பொதுமக்களுடைய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப. கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!