ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் எனக்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்றும், ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 4-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.