413
10.4.2022 “ரமணி ராஜ்ஜியம்” கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கவிஞர் திரு.விநாயகமூர்த்திஅவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM நிலையம் தெரிவித்துக் கொள்கிறது.
பழைய நினைவுகள்
ஒன்பதாம் வகுப்பில்
ஓதிப் படிக்கையில்
என்வீட்டுக் குடும்பம்
இருபதெட் டிருந்தோம்
பத்தாம் வகுப்பில்
தந்தையின் வழியில்
மொத்தமாய் இருந்தோம்
முடிவாய் எட்டுபேர்
சத்தமிலா(து) என்சங்கமம்
சார்வாய் நாலுபேரே
கடைசி சட்டி
கூழ்கரைத்து பாட்டியும்
அடைத்திட்டாள் எம்பசி
அடைந்தோம் நிம்மதி
படைத்தோம் ஆனந்தம்
பரவசம் கண்டோம்
கிடைத்த அன்பால்
கிளர்ச்சி அடைந்தோமே!
பெற்றேன் பெருமகிழ்வு
பேரானந்தம் கொண்டேன்
உற்றேன் இன்பம்
உறுதியாய்ப் புவியில்
கற்றேன் பாடம்
கருத்தில் மகிழ்ந்தே
நற்றவம் புரிந்தேன்
நலமுடன் யானுமே!
பொற்றாமரைக் குளத்தில்
புகுந்து ஆடியதும்
பெற்றவர் என்னை
பிரட்டி எடுத்ததும்
மற்றவர் காணுமுன்
மறைந்து சென்றதும்
நற்றவம் என்று
நானும் மகிழ்ந்தேனே!
சொற்றமிழ் கற்றிட
சுகமே கொண்டேன்
நற்றமிழ் கற்றேன்
நாளு மினிதாக
பெற்றேன் பெருமை
பெரிது கொண்டே
விற்றேன் தாழ்மை
விளக்கம் பெற்றேனே!
பண்பாய் முன்னம்
பழநினை எண்ணி
மண்புகழ் வாழ்வு
மனதில் கொண்டே
உண்மை தன்மை
உறுதி யேற்று
கண்ணில் கருணை
கவித்துவம் செய்வேனே!
பொன்.விநாயகமூர்த்தி
தலைமையாசிரியர்,
அரசுயர் பள்ளி,
வடுகசாத்து(தி.வ.மா).
add a comment