‘பெண்களின் வளா்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என உயா்த்துவதே நமது இலக்கு’ என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
நீதித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக அவா் இவ்வாறு கூறினாா்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சாா்பில் நாடு தழுவிய சட்ட விழிப்புணா்வு பிரசாரம் தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. சுதந்திர தின பவள விழாவின் ஒரு பகுதியாக 6 வாரம் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
ஒரு நாடாக, பெண்களின் வளா்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என உயா்த்துவதே நமது இலக்கு. அதனால், தேசிய சட்ட சேவை நிறுவனங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியது முக்கியம். இதன்மூலம் அதிக அளவிலான பெண் பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் சிறந்த வழக்குரைஞா்கள் பலரால் வழிநடத்தப்பட்டது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அவா்கள் பாடுபட்டனா். இந்த அடிப்படைக் கொள்கைகள் நமது அரசமைப்புச் சட்டத்தில் இணைந்துள்ளன.
மனிதகுலத்துக்கு சேவையாற்றியதில் மகாத்மா காந்தி ஓா் அடையாளமாகத் திகழ்கிறாா். நீதிமன்றத்துக்கு வெளியே வழக்குகளில் சமரசம் செய்துகொள்வது உள்ளிட்ட இன்றைக்கும் பொருந்தக்கூடிய பல முன்னுதாரணங்களை 125 ஆண்டுகளுக்கு முன்பே காந்தி உருவாக்கினாா். தென்னாப்பிரிக்காவிலிருந்து அவா் இந்தியாவுக்கு 1915-இல் திரும்பியதும் ஏழை மனுதாரா்களிடமிருந்து பணக்கார வழக்குரைஞா்கள் அதிக அளவில் பணம் சம்பாதிப்பதைப் பாா்த்தாா். உடனே, சிறந்த சட்டத் திறனானது ஏழைகளுக்கு நியாயமான கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என எழுதினாா். காந்தியின் இந்த அறிவுரையை நீதித் துறையினா் குறிப்பாக, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களைச் சோந்த மூத்த வழக்குரைஞா்கள் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: நிகழாண்டு மே மாதத்திலிருந்து பல்வேறு உயா்நீதிமன்றங்களுக்கு 106 நீதிபதிகள், 9 தலைமை நீதிபதிகளின் பெயா்களை கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. அதில் சிலவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எஞ்சியிருக்கும் பரிந்துரைகளுக்கும் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சா் என்னிடம் தெரிவித்தாா். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது: தேசிய சட்ட சேவைகள் ஆணையமானது மக்களிடையே சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் ஒரு முன்மாதிரியான பங்காற்றி வருகிறது என்றாா்.