217
பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்து இருக்கையில் இளம்வயது வாலிபரும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவரும் தோளில் ஒரு பெரிய பேக்கும் வைத்திருந்தனர்.
இருவரும் தங்களிடம் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டனர். எண்ணிய பணத்தில் முப்பது ரூபாய் குறைவாக இருந்தது. இருவருக்கும் ஒரே பதட்டம். படம் தவறியதா…?. அல்லது செலவு செய்தோமா…? என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
” பிரதர்… நீங்க தாகமாக இருக்குன்னு ஒரு இளநீர் குடிச்சீங்க… மறந்திட்டீங்களா…?” என்று கேட்டாள்.
” ஆமாம்…. லீனா. நானும் மறந்திட்டேன். ஓனருக்கு பணம் சரியாக கொடுக்கணுமே…?. என்னச் செய்ய…” என்று வருத்தமாய் சொன்னான்.
அவர்கள் இருவரின் முகத்திலும் கவலை இருந்தது. அவர்கள் இறங்கிய இடத்தில் நானும் இறங்கினேன்.
” தம்பி… நீங்க என்ன வேலைப் பார்க்கிறீங்க…” கேட்டேன் நான்.
” நாங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மேப், அறிவியல் புத்தகங்கள், கைடு போன்ற புத்தகங்களை இருபது சதவீதம் தள்ளுபடியில் விற்பனைச் செய்கிறோம்…” என்றான் அவன்.
” அறிவியல் புத்தகம் இருந்தால் ஒன்று நான் வாங்கிக்கிறேன். என் மகனுக்கு பயன்படும்…” என்று நான் கேட்டதும், அவர்கள் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.
அறிவியல் சுரங்கம் என்ற அந்த கனமான புத்தகத்தை எடுத்தேன்.
” தம்பி… இந்த புத்தகம் போதும்… விலை என்ன…?”
” தள்ளுபடி போக முன்னூற்று ஐம்பது ரூபாய்…”
நான் இரண்டு இருநூறு ரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தேன். மீதி ஐம்பது ரூபாய் என்னிடம் கொடுக்க வந்தான்.
” நீங்க இரண்டு பேரும் நிறைய இடங்களுக்கு நடந்து சென்றிருப்பீங்க… உங்க களைப்பு முகத்தில் தெரியுது. மீதி ரூபாய்க்கு காபி வாங்கிக் குடிங்க… தம்பி.” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு நகர்ந்து, அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தேன் நான்.
-
நாகர்கோவில் கோபால்
மிக்க மகிழ்ச்சி…
எனது சிறுகதையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்…
மிக்க நன்றி
நன்று
இலக்கிய ஆர்வலர்கள் விரும்பி படிக்கும் ‘நான்’ இதழில் எனது சிறுகதை வெளிவந்ததில் மனதில் மகிழ்ச்சி மழை!