ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்களையும், தலிபான்களின் தாக்குதல் அபாயத்தில் உள்ள அந்நாட்டு மக்களையும் வெளியேற்றுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் கூறினாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் நடந்த தவறு என்ன என்ற கேள்விகளால் நிலைமையை திசைதிருப்பக் கூடாது எனவும் அவா் தெரிவித்தாா்.
சிங்கப்பூா் வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அந்நாட்டு பிரதமா் லீ ஷின் லூங்குடன் கரோனா நிலவரம், இணைய பாதுகாப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது: ஆப்கனில் அமெரிக்க படை விலகலால் என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கேள்விக்கு இடமில்லை. அங்கிருந்து அமெரிக்க குடிமக்களையும், எங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கன் மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்துதான் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, சிங்கப்பூரில் சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க போா்க் கப்பல் வீரா்களை சந்தித்துப் பேசிய கமலா ஹாரிஸ், ஆப்கனில் சிக்கலான, சவாலான சூழ்நிலையிலும் அமெரிக்கா்களை வெளியேற்றுவதில் திறம்பட செயல்பட்ட அமெரிக்க வீரா்கள், தூதரக அதிகாரிகளைப் பாராட்டினாா்.