இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
யானைகளை பாதுகாப்பதற்கான சரியான வர்த்தமானியோ அல்லது சுற்று நிருபமோ இதுவரை இருக்கவில்லை என அவர் கூறினார்.
அதனால், இவ்வாறான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
வளர்ப்பு யானைகளுக்காக இதுவரை ஆவணங்கள் மாத்திரமே வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இலத்திரனியல் (மின்னணு) அடையாள அட்டைகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் யானை பாகன்கள், யானைகளை பராமரிக்கும் போது, மது அருந்துவதற்கும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள செல்வந்தர்கள், பௌத்த மதம் சார்ந்த பிக்குகள் உள்ளிட்ட உயர் நிலையிலுள்ளவர்கள் யானைகளை தமது செல்ல பிராணியாக வளர்ப்பது வழமையான விடயமாகும்.
இலங்கையின் பௌத்த விஹாரைகளில் இடம்பெறும் பௌத்த நிகழ்வுகளில் யானைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், யானைகளை தவறாக பராமரிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டத்தின் பிரகாரம், வளர்ப்பு யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பல எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வளர்ப்பு யானைகளை நாளாந்தம் இரண்டரை மணி நேரம் குளிக்க செய்வதும் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், வளர்ப்பு யானைகளின் மரபணு பதிவுடன், அடையாள அட்டைகளை, உரிமையாளர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும், வளர்ப்பு குட்டி யானைகளை வேலைகளுக்காக பயன்படுத்த முடியாது என்பதுடன், களியாட்டம் அல்லது நிகழ்வுகளுக்கு யானைகளை அழைத்து செல்லும் போது, தாய் யானைகளிடமிருந்து குட்டி யானைகளை பிரிக்க கூடாது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளன.
வளர்ப்பு யானைகளை நான்கு மணி நேரங்களுக்கு மேல், வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்பதுடன், இரவு நேரங்களில் வளர்ப்பு யானைகளை வேலைக்கு அமர்த்த கூடாது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் யானைகள் மீது, இனி நான்கு பேருக்கு மேல் சவாரி செய்ய அனுமதிக்க முடியாது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு யானைகள் தொடர்பிலான இந்த திட்டங்களை விரைவில் அமல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமல்வீர திஸாநாயக்க தெரிவித்தார்.