“ஆப்கனில் கால்பந்தாட்ட வீராங்கனைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” : முன்னாள் கேப்டன் கலிதா
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. இந்நிலையில் அந்நாட்டின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கலிதா போபல் (Khalida Popal).
‘எங்கள் நாட்டின் கால்பந்தாட்ட வீராங்கனைகள் எனக்கு போன் செய்து வருகின்றனர். நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் இவை தான். உங்களது சமூக வலைத்தள கணக்குகளை முடக்குங்கள், உங்களது புகைப்படங்களை அழியுங்கள், எங்காவது தப்பி சென்று மறைந்துக் கொள்ளுங்கள், உங்களை கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்த அக்கம் பக்கத்தினரிடம் இருந்து தள்ளி இருங்கள் என இதையெல்லாம் அவர்களிடம் கனத்த இதயத்துடனே சொல்ல வேண்டி உள்ளது.
அவர்களது உயிருக்கு தற்போது அங்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக கால்பந்தாட்டத்தை முன்னெடுத்தவர்கள் நாங்கள். ஆனால் இன்று அதை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. பெண்கள் நம்பிக்கையை இழந்துள்ளார்கள். அவர்களது கண்களில் கண்ணீர் குளமாக பெருக்கெடுத்துள்ளது’ என தெரிவித்துள்ளார் அவர்.
கலிதாவுக்கு தொடர்ச்சியாக வந்த மிரட்டல்களால் 2016 வாக்கில் டென்மார்க் நாட்டில் அவர் தஞ்சம் புகுந்தார்.