பெகாசஸ் விவகாரம்.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை.. பாதுகாப்பு துறை அமைச்கம்
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று கடந்த மாதம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
நாடாளுமன்றம்
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அவையை முடக்கி வருகின்றன. பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில், என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் அரசாங்கம் ஏதேனும் பரிவர்த்தனை செய்திருக்கிறதா என்று உறுப்பினர் சிவதாசன் மத்திய அரசிடம் கேள்வி கேட்டு இருந்தார்.
பாதுகாப்பு துறை அமைச்சகம்
அதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை என்று தெரிவித்தது. அதேசமயம் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் அல்லது அமைச்சரவை செயலகம் போன்ற பிற அமைச்சகங்கள் இந்த விஷயத்தில் இன்னும் ஒரு அறிக்கையை வெளியிடவில்லை.