‘தலையில் பேண்டேஜ்’ கிம் ஜாங் உன்னுக்கு என்னாச்சு? பீதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான்..
வட அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஜூலை 24 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற கொரிய மக்கள் ராணுவ நிகழ்ச்சியிலும், ஜூலை 27 முதல் 29 ஆம் தேதி வரையிலான போர் வீரர்களுக்கான நினைவு நாள் கூட்டங்களிலும் பங்கேற்ற கிம் ஜாங் உன்னின் தலையின் பின்புறத்தில் பேண்டேஜ் இருந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதால், அவருக்கு என்னாச்சு? எதனால் அவர் பேண்டேஜ் அணிந்திருக்கிறார்? என்ற கேள்வியும், யூகங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற வடகொரியாவின் பொலிட்பீரோ கூட்டத்தில் கிம் ஜாங் உன் பங்கேற்றபோது, அவரது தலையில் எந்தவிதமான பேண்டேஜூம் இல்லை. ஜூலை 11 ஆம் தேதி இசைக் கலைஞர்களுடன் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் தலையில் எந்தவிதமான பேண்டேஜ் இல்லை. ஆனால், அதன்பிறகு நடைபெற்ற அரசு விழாக்களில் கிம் ஜாங் உன் பங்கேற்றபோது, அவரது தலையின் பின்பக்கத்தின் வலது புறத்தில் சிறிய அளவில் பேண்டேஜ் இருக்கிறது.
இது குறித்து வட கொரியா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கிம் ஜாங் உன் உடல் நிலை பொறுத்தவரை, அந்நாடு எப்படி மர்ம பிரதேசமாக இருக்கிறதோ, அதனைப்போலவே அவரது உடல்நிலை குறித்த தகவல்களும் மர்மமாகவே இருக்கின்றன. அண்மையில் அவர் சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது விவாதப் பொருளாக மாறியது. வட கொரியாவின் முன்னாள் அதிபர்களான அவரது அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால், இவருக்கும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம் என கூறப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரின் உடல் நிலை மிகவும் மெலிந்து காணப்பட்டதும், அவருக்கு உடல் பிரச்சனைகள் இருப்பது உறுதி என்பது போன்ற தகவல்கள் பரவின. அதேநேரத்தில், கிம் ஜாங் உன் தன்னுடைய உடல் நிலையில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதால், தீவிர பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைந்திருப்பதாகவும் சர்வதேச உளவுத்துறை தகவல்கள் கூறின.
இந்தளவுக்கு கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் அதிமுக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், முடியாட்சி நடத்தி வரும் கிம் ஜாங் உன் சர்வதேச விதிகளுக்கு உட்படாமல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார். வட கொரியாவிடம் மிகவும் சக்தி வாய்ந்த அணு ஆயுத கருவிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், வடகொரியாவின் ஒவ்வொரு செயலையும் அருகாமையில் இருக்கும் நாடுகளான ஜப்பான் மற்றும் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் கவனித்து வருகின்றன. ஒருவேளை கிம் ஜாங் உன்னுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை நிர்வகிக்கப்போவது யார்? என கேள்வியும் உலக நாடுகளிடம் இருந்து வருகிறது. இதனையொட்டியே கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்து அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.