இந்தியா

9 வினாடிகள்.. 3,700 கிலோ வெடிமருந்து.. 320 அடி உயரம் – நொய்டாவில் தகர்க்கப்படும் இரட்டைக் கோபுரங்கள்

52views
உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடமானது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இதனை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்று இந்த இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்படுகின்றன. இந்த இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப்போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடங்களில் 40 மாடிகள் உள்ளன. ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகளை கொண்டு இந்தக் கட்டடங்கள் தகர்க்கப்படவுள்ளன. இதற்காக மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்டடங்களை சுற்றி உள்ள அனைவரும் மற்றும் அவர்களது வளர்ப்பு உயிரினங்களும் இன்று அதிகாலையில் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
வெடிகுண்டுகளை வைத்து இரு கட்டடங்களும் அவற்றுக்குள்ளாகவே இடிந்து விழும்படி வெடிக்க வைத்தபிறகு, ஐந்து மணிநேரம் கழித்து தான் அப்பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். தெருக்களில் சுற்றித் திரியும் உயிரினங்கள் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் சேர்க்கப்படும். மேலும் அப்பகுதியிலும் அருகிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்படும் போது, 984 அடி உயரம் வரையில் தூசு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விமான நிலையங்களில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.
20,000 இணைப்புகளின் வழியே 40 மாடிகளிலும் வெடிப்பொருட்கள் பொருத்தப்பட்டிருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். இரண்டு வானளாவிய 40 மாடி கட்டடங்கள் வெறும் 9 வினாடிகளில் இன்று இடிக்கப்படுகின்றன. இரட்டைக் கோபுரங்கள் கீழே விழுந்த பிறகு, 30,000 டன் கட்டுமான குப்பைகள் குவியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1,200 லாரிகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது அங்கிருந்து குப்பைகளை அகற்ற வேண்டியிருக்கும்.
இந்தியாவில் வானளாவிய கட்டடங்களை இடிப்பது புதிதல்ல. ஏற்கனவே 2020ஆம் ஆண்டு, கேரளாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமார் 2,000 பேர் வசித்த இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. தமிழகத்திலும், சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அதன் அருகே இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டடமும் கடந்த 2016ம் ஆண்டு தகர்க்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!