இந்தியா

5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை : ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்திற்கு அனுமதி

43views

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, 5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு செலுத்தி (மனிதர்களுக்கு செலுத்தி) பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி 5 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

கோபர்வேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, நாட்டில் 10 இடங்களில் பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 30 கோடி டோசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ரூ.1,500 கோடியை செலுத்தி உள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்காக பரிசோதிக்கப்படுகிற 4ஆவது தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே குழந்தைகளுக்காக பாரத் பயோடெக், இந்திய சீரம் நிறுவனம், ஜைடஸ் கேடிலா ஆகிய 3 நிறுவன தடுப்பூசிகள் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால், அவர்கள் மத்தியில் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் 20 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில், 6 சதவீதம் பேர் அதாவது, 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 224 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு, சிறுவர்கள் மத்தியில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து ஏப்ரல் மாதத்தில் 7.2 சதவீதமாக உயர்ந்தது. மே மாதம் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் 73 ஆயிரத்து 555 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பில் 7.7 சதவீதமாக இருந்தது.

அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு மாநில அளவில் குறைந்தாலும் கூட தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் 8.8 விழுக்காடாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகவும், இறப்பு விகிதம் மிக மிகக் குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!